சிங்கப்பூர் மசாஜ் கடையில் பரபரப்பு..! பெண் ஊழியரை தாக்கிய 40 வயது பெண் கைது.!

சிங்கப்பூர் மசாஜ் கடையில் பரபரப்பு..! பெண் ஊழியரை தாக்கிய 40 வயது பெண் கைது.!

சிங்கப்பூர் சைனா டவுனில் பீப்பிள்ஸ் பார்க் வளாகத்தில் உள்ள ஒரு மசாஜ் கடைக்கு வெளியே, மசாஜ் செய்யும் பெண் ஊழியரை அறைந்து, தரையில் தள்ளித் தாக்கிய 40 வயது பெண் ஒருவரை பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த குற்றத்திற்காக காவல்துறை கைது செய்துள்ளது.

இது குறித்த வீடியோ பதிவானது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

ஜூலை 15ஆம் தேதி அன்று இரவு சுமார் 7 மணி அளவில் பீப்பிள்ஸ் பார்க் வளாகத்தின் 2வது மாடியில் இந்த சம்பவமானது நிகழ்ந்துள்ளது.

அங்குள்ள மசாஜ் கடை ஊழியர் ஒருவர் வாடிக்கையாளர்களை கவர உரத்த குரலில் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த 40 வயது பெண் சத்தம் போடாமல் அமைதியாக இருக்கும் படி கூறியுள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே, அந்தப் பெண் மசாஜ் ஊழியரை திடீரென கன்னத்தில் அறைந்துள்ளார். பின்னர் இருவருக்கும் இடையே கடுமையான மல்யுத்தச் சண்டை ஏற்பட்டு, அந்த ஊழியரைத் தரையில் தள்ளிப் பிடித்து அவர் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இச்சம்பவத்தில் காயமடைந்த 53 வயது மசாஜ் பெண் ஊழியர் சுயநினைவுடன் சிகிச்சைக்காக சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

சம்பவ இடத்திற்கு வந்த 6 காவல்துறை அதிகாரிகள் ரகளையில் ஈடுபட்ட 40 வயது பெண்ணை கைது செய்தனர். அவர் மீது பொதுமக்களுக்கு பெரும் தொல்லை கொடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

காவல்துறை விசாரணையில் கைது செய்யப்பட்ட இப்பெண், கடந்த ஜூலை 2ஆம் தேதி இதே வளாகத்தின் 3வது மாடியில் உள்ள மற்றொரு மசாஜ் கடையில் ஒரு ஆண் ஊழியருடன் பயங்கர சண்டையில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.

அந்த ஆண் ஊழியர் தனது முன்னாள் காதலன் என்றும் தங்களுக்குள் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக அந்த சண்டை நடந்ததாக அப்பெண் கூறியுள்ளார்.

தற்போது இச்சம்பவம் குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றது.