சிங்கப்பூர் Budget 2027: உங்கள் கருத்துகளைப் பகிர அழைப்பு..! ஜனவரி 6 வரை மட்டுமே அவகாசம்!

சிங்கப்பூர் Budget 2027: உங்கள் கருத்துகளைப் பகிர அழைப்பு..! ஜனவரி 6 வரை மட்டுமே அவகாசம்!

சிங்கப்பூரின் 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் (Budget 2027) தொடர்பாக பொதுமக்கள் தங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் பகிர்ந்துகொள்ள அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இதற்காக 2027 ஜனவரி 6ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, சிங்கப்பூரர்கள் மட்டுமின்றி, பல்வேறு அமைப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களும் தங்களது கருத்துகளையும் பரிந்துரைகளையும் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கலாம் என்று நிதி அமைச்சு நவம்பர் 12ஆம் தேதி அறிவித்துள்ளது.

 

2027ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தொடர்பான கருத்துக் கேட்பு மூன்று முக்கியக் கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டு நடைபெறுகிறது.

முதலாவதாக, சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்துவதுடன், உலகளாவிய போட்டித்தன்மையையும் அதிகரிப்பது.

இரண்டாவதாக, சிங்கப்பூர் ஊழியர்களின் திறன்களை மேம்படுத்தவும், அவர்களின் எதிர்கால வேலைவாய்ப்புகளை உறுதிப்படுத்தவும் முதலீடு செய்வது.

மூன்றாவதாக, சிங்கப்பூரர்களுக்கு அதிக பாதுகாப்பையும் நம்பிக்கையையும் வழங்கும் வகையில் புதிய நடவடிக்கைகளை உருவாக்குவது ஆகியவை முக்கிய நோக்கங்களாக உள்ளன.

 

கருத்துகளை எப்படிப் பகிரலாம்?

பொதுமக்கள் தங்களது கருத்துகளையும் யோசனைகளையும் சிங்கப்பூர் பட்ஜெட்டின் அதிகாரப்பூர்வ இணையத்தளம், REACH அமைப்பின் Budget 2027 குறுந்தளம், அதன் Facebook மற்றும் Instagram பக்கங்கள், மக்கள் கழகத்தின் (People’s Association) ShareYourViews இணையப்பக்கம் ஆகியவற்றின் மூலம் சமர்ப்பிக்கலாம்.

இதுதவிர, அரசாங்கத்தின் பொதுமக்கள் கருத்தறியும் அமைப்பான REACH, நேரடியாகப் பொதுமக்களைச் சந்தித்து அவர்களின் கருத்துகளையும் பரிந்துரைகளையும் சேகரிக்கும் வகையில் சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சிகளையும் நடத்தவுள்ளது. இதற்கான தேதி மற்றும் இடம் குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

மேலும், மக்கள் கழகமும் அதன் அடித்தள அமைப்புகளும் சிங்கப்பூரின் பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில் நேரடி கலந்துரையாடல்களையும் இணையவழி நிகழ்ச்சிகளையும் நடத்தி பொதுமக்களின் கருத்துகளைச் சேகரிக்கவுள்ளன.

சிங்கப்பூரின் அடுத்த நிதியாண்டுக்கான அரசாங்கத்தின் வருவாய், செலவினம் மற்றும் நிதிக் கொள்கைகளை உள்ளடக்கிய Budget 2027, 2027 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 2028 மார்ச் 31ஆம் தேதி வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கும்.

எனவே, நாட்டின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு, ஊழியர்களின் திறன் மேம்பாடு மற்றும் மக்களின் நலன் தொடர்பான தங்களது கருத்துகளைப் பொதுமக்கள் ஜனவரி 6ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம்.

பொதுமக்களின் கருத்துகளையும் தேவைகளையும் அறிந்து, அதற்கேற்ப எதிர்கால நிதித் திட்டங்களை உருவாக்குவதே இந்தக் கருத்துக் கேட்பின் முக்கிய நோக்கமாகும்.