சிங்கப்பூர் உட்லண்ட்ஸில் அதிரடி மாற்றம்: 16 கி.மீ. புதிய சைக்கிள் பாதைகள் தயார்!

சிங்கப்பூர் உட்லண்ட்ஸில் அதிரடி மாற்றம்: 16 கி.மீ. புதிய சைக்கிள் பாதைகள் தயார்!

சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் பகுதியில் சுமார் 16 கிலோமீட்டர் நீளமுள்ள புதிய சைக்கிள் பாதைகள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதன் மூலம் குடியிருப்பாளர்கள் சைக்கிளில் பயணம் செய்வதற்கான வசதிகள் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளன.

புதிய சைக்கிள் பாதைகள் மூலம் அட்மிரால்டி, மார்சிலிங், உட்லண்ட்ஸ் மற்றும் உட்லண்ட்ஸ் சவுத் ஆகிய நான்கு MRT நிலையங்களுக்கும், அப்பகுதியில் உள்ள முக்கிய வசதிகளுக்கும் சைக்கிளில் எளிதாகச் செல்ல முடியும்.

ஏற்கெனவே உள்ள 26 கிலோமீட்டர் சைக்கிள் பாதைகள் மற்றும் பூங்கா இணைப்புப் பாதைகளுடன் சேர்த்து, உட்லண்ட்ஸ் மற்றும் செம்பவாங் பகுதிகளில் மொத்தம் 42 கிலோமீட்டர் நீளத்துக்கு சைக்கிள் பயணக் கட்டமைப்பு விரிவடைந்துள்ளது.

மேலும், உட்லண்ட்ஸ் குடிமை மையம், கோஸ் வே பாயிண்ட் (Causeway Point), அட்மிரால்டி வில்லேஜ், உட்லண்ட்ஸ் மருத்துவ வளாகம், ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி மற்றும் உட்லண்ட்ஸ் வாட்டர்ஃபிரண்ட் பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கான இணைப்புகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன.

இந்தப் புதிய பாதைகளை அமைப்பதற்காக சுமார் 2.4 கிலோமீட்டர் நீளமுள்ள திறந்தவெளி வடிகால்கள் மூடப்பட்டு, நடைபயணிகள் மற்றும் சைக்கிள் ஓட்டிகளுக்குக் கூடுதல் இடவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 35 நடைபாதைக் கடப்பிடங்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. 44 பேருந்து நிறுத்தங்களிலும் சைக்கிள் ஓட்டிகள் மற்றும் நடைபயணிகள் எளிதாகச் செல்லும் வகையில் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

அடுத்த ஆண்டிலிருந்து உட்லண்ட்ஸ் மற்றும் செம்பவாங் பகுதிகளில் மேலும் சுமார் 9 கிலோமீட்டர் நீளத்துக்கு சைக்கிள் பாதைகள் அமைக்கப்படவுள்ளன. இதில் புதிய ஜோகூர்-சிங்கப்பூர் RTS ரயில் நிலையத்துடன் இணைக்கும் பாதைகளும் இடம்பெறும்.

இந்தப் பணிகள் நிறைவடைந்ததும், உட்லண்ட்ஸ் சிங்கப்பூரின் மிகப்பெரிய நகர்ப்புற சைக்கிள் பாதைக் கட்டமைப்புகளில் ஒன்றைக் கொண்ட பகுதியாகத் திகழும்.

இதற்கிடையே, சிங்கப்பூரின் தேசிய சைக்கிள் பாதை வலையமைப்பு 2024ஆம் ஆண்டில் சுமார் 600 கிலோமீட்டராக இருந்த நிலையில், தற்போது 800 கிலோமீட்டருக்கும் அதிகமாக விரிவடைந்துள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் இதனை சுமார் 1,300 கிலோமீட்டராக அதிகரிக்க அதிகாரிகள் இலக்கு நிர்ணயித்துள்ளனர்.