உட்லண்ட்ஸ் RTS நிலையத்தில் என்ன நடந்தது..? 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பிரம்மாண்டப் பயிற்சி!

உட்லண்ட்ஸ் RTS நிலையத்தில் என்ன நடந்தது..? 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பிரம்மாண்டப் பயிற்சி!

சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் நார்த் RTS நிலையத்தில் பொதுப் பாதுகாப்பு மற்றும் அவசரகாலச் சூழல்களை எதிர்கொள்வதற்கான பிரம்மாண்ட பல்துறைப் பாதுகாப்புப் பயிற்சி நடத்தப்பட்டுள்ளது. இதில் 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

‘Exercise Quicksilver 12’ எனப் பெயரிடப்பட்ட இந்த இரண்டு நாள் பயிற்சி, நவம்பர் 11 மற்றும் 12ஆம் தேதிகளில் உட்லண்ட்ஸ் நார்த் RTS நிலையத்தில் நடைபெற்றது.

சிங்கப்பூர் காவல்துறை, குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA), சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF), நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) ஆகியவை இணைந்து இந்தப் பயிற்சியை முன்னெடுத்தன.

மேலும், Certis Cisco மற்றும் SMRT அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் இதில் கலந்துகொண்டனர்.

பொதுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய பல்வேறு சூழல்களை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பயிற்சி அமைக்கப்பட்டது. அவசரநிலைகளின்போது சம்பந்தப்பட்ட அமைப்புகள் எவ்வாறு ஒன்றிணைந்து செயல்படுகின்றன என்பதைச் சோதிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

சந்தேகத்திற்கிடமான பொருட்கள் தொடர்பான சோதனைகள், பாதுகாப்பு நடவடிக்கைகள், தீ விபத்து போன்ற சூழல்கள் மற்றும் பணயக்கைதிகள் தொடர்பான போலி அவசரநிலைச் சம்பவம் ஆகியவை பயிற்சியில் இடம்பெற்றன.

இதன் மூலம் காவல்துறை மற்றும் சம்பந்தப்பட்ட அமைப்புகள் இடையிலான ஒருங்கிணைப்பு, விரைவான முடிவெடுக்கும் திறன், அவசரகால வளங்களைச் சரியான முறையில் பயன்படுத்துதல் ஆகியவை மதிப்பிடப்பட்டன.

பயிற்சியின் இறுதிக்கட்டத்தில், RTS நிலையத்தில் பணயக்கைதிகள் தொடர்பான போலிச் சம்பவம் ஒன்று உருவாக்கப்பட்டது. அந்தச் சூழலைச் சமாளிக்க பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டனர்.

மாறிவரும் அவசரநிலைகளுக்கு ஏற்ப அதிகாரிகள் எவ்வாறு பதிலளிக்கிறார்கள் என்பதையும், சம்பவத்தைப் பாதுகாப்பான முறையில் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அவர்களின் தயார்நிலையையும் இந்தப் பயிற்சி மதிப்பிட உதவியது.

சிங்கப்பூரையும் மலேசியாவின் ஜொகூர் பாருவையும் இணைக்கும் RTS Link சேவை தொடங்குவதற்கு முன்னதாக இந்தப் பயிற்சி நடத்தப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் இந்தப் போக்குவரத்து இணைப்பைப் பயன்படுத்தும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும், முக்கியப் போக்குவரத்து உள்கட்டமைப்புகளில் ஏற்படக்கூடிய அவசரநிலைகளைச் சமாளிக்கத் தயாராக இருப்பதும் இத்தகைய பயிற்சிகளின் முக்கிய நோக்கமாகும்.

பொதுப் பாதுகாப்பு தொடர்பான சம்பவங்கள் ஏற்படும்போது சம்பந்தப்பட்ட அமைப்புகள் விரைவாகவும் ஒருங்கிணைந்த முறையிலும் செயல்படுவதற்கான தயார்நிலையை மேலும் வலுப்படுத்தத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது.