நண்பரை நம்பி S$70,000 கொடுத்த பெண்..3 மாதங்களாகியும் முடியாத வீட்டு வேலை..!! மேலும் S$10,500 கேட்பதாகப் புகார்!

சிங்கப்பூரில் புதிய வீட்டை அழகுபடுத்துவதற்காக ஏறக்குறைய S$70,000 செலவு செய்த ஒற்றைத் தாய் ஒருவர், மூன்று மாதங்களைக் கடந்தும் வீட்டின் புதுப்பிப்புப் பணிகள் முழுமையடையாததால் பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளார்.
33 வயதான டாய் ஹுய் யி என்ற ஒப்பனைக் கலைஞர், கடந்த ஜூன் மாதம் புக்கிட் பாத்தோக் 32வது தெருவில் உள்ள 315ஆம் எண் கொண்ட நான்கு அறை HDB வீட்டை வாங்கியுள்ளார். தானும் தனது நான்கு வயது மகளும் புதிய வீட்டில் வசிக்க வேண்டும் என்ற ஆசையில் வீட்டைப் புதுப்பிக்க முடிவு செய்துள்ளார்.
ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பழக்கமான ஆண் நண்பர் ஒருவர் வீட்டு அலங்காரத் தொழிலில் ஈடுபட்டு வந்ததால், அவர் மீதுள்ள நம்பிக்கையில் புதுப்பிப்புப் பணிகளை அவரிடம் ஒப்படைத்துள்ளார்.
வீட்டில் காணப்பட்ட குறைபாடுகள் குறித்து புகைப்படங்களுடன் ஒப்பந்ததாரரிடம் புகார் தெரிவித்ததாகவும், ஆனால் உரிய பதில் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், 20க்கும் மேற்பட்ட முறை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றும் ஒப்பந்ததாரர் அழைப்புகளை ஏற்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, ஏற்கெனவே இருந்த குறைபாடுகளைச் சரிசெய்வதற்குப் பதிலாக, இடித்தல், மரவேலை, குழாய் அமைத்தல், செங்கல் வேலை உள்ளிட்ட 12 வகையான பணிகளுக்கு மேலும் S$10,500 செலுத்த வேண்டும் என்று புதிய விலைப்பட்டியல் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கூடுதல் தொகையைச் செலுத்திப் பணிகளைத் தொடர்வது அல்லது தற்போதைய நிலையிலேயே வீட்டைப் பெற்றுக்கொண்டு பணிகளை நிறுத்திக்கொள்வது என இரண்டு தெரிவுகள் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து AZEY Interior Contractor நிறுவனம் அளித்த விளக்கத்தில், வீட்டின் உரிமையாளர் ஒப்புக்கொண்ட கட்டணத்தை முழுமையாகச் செலுத்தாததால் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
மேலும், கூறப்படும் குறைபாடுகள் குறித்து உரிமையாளர் குறிப்பிட்டுத் தெரிவித்தால் அவற்றை ஒவ்வொன்றாக ஆய்வு செய்யத் தயாராக இருப்பதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.
சில மாற்றங்கள் உரிமையாளரின் தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் பின்னர் கோரப்பட்டவை என்றும், அவற்றை உண்மையான கட்டுமானக் குறைபாடுகளுடன் ஒப்பிட முடியாது என்றும் நிறுவனம் விளக்கியுள்ளது.
கூடுதல் S$10,500 செலவுக்கான மாற்றுப் பணிகள் குறித்து முன்கூட்டியே உரிமையாளருடன் கலந்துரையாடியதாகவும், இந்தப் பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கத் தயாராக இருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நண்பர் மீதான நம்பிக்கையில் வீட்டுப் புதுப்பிப்புப் பணிகளை ஒப்படைத்த நிலையில், பெரும் தொகையைச் செலவிட்டும் புதிய வீட்டில் குடியேற முடியாத சூழல் ஏற்பட்டிருப்பது அந்த ஒற்றைத் தாய்க்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Follow us on :
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
