சிங்கப்பூரில் விற்பனை செய்யப்பட்ட ஆப்பிள் ஜூஸில் பூஞ்சை நச்சு..!! கடைகளிலிருந்து அதிரடி அகற்றம்!!

சிங்கப்பூரில் விற்பனை செய்யப்பட்ட ஆப்பிள் ஜூஸில் பூஞ்சை நச்சு..!! கடைகளிலிருந்து அதிரடி அகற்றம்!!

சிங்கப்பூரில் விற்பனை செய்யப்பட்ட நியூசிலாந்தின் ‘ஹோம் க்ரோன்’ (Homegrown) நிறுவனத்தின் ஆப்பிள் ஜூஸில், அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான பூஞ்சை நச்சு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட ஆப்பிள் ஜூஸ் பாட்டில்களை விற்பனை நிலையங்களிலிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த ஆப்பிள் ஜூஸை வாங்கிய நுகர்வோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதனை அருந்த வேண்டாம் என சிங்கப்பூர் உணவு முகமை அறிவுறுத்தியுள்ளது.

ஹாங்காங்கின் உணவுப் பாதுகாப்பு மையம், ‘ஹோம் க்ரோன் 100% ப்யூர் என்இசட் ஆப்பிள் ஜூஸ்’ (Homegrown 100% Pure NZ Apple Juice) மாதிரிகளை ஆய்வு செய்தபோது, அதில் ‘பாட்டுலின்’ (Patulin) எனப்படும் பூஞ்சை நச்சு அதிக அளவில் இருப்பது கண்டறியப்பட்டது. இதுகுறித்து கடந்த செவ்வாய்க்கிழமை (17ஆம் தேதி) அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், பொதுமக்கள் அந்த ஆப்பிள் ஜூஸை அருந்த வேண்டாம் என எச்சரித்ததுடன், பாதிக்கப்பட்ட தொகுப்புகளின் விற்பனையை உடனடியாக நிறுத்துமாறும் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு உத்தரவிட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக சிங்கப்பூர் உணவு முகமை, குறிப்பிட்ட ஆப்பிள் ஜூஸின் இறக்குமதியாளரான கோல்ட் ஸ்டோரேஜ் (Cold Storage) நிறுவனத்தைத் தொடர்புகொண்டது. இதனைத் தொடர்ந்து, அந்நிறுவனம் பாதிக்கப்பட்ட ஆப்பிள் ஜூஸ் பாட்டில்களைத் தனது விற்பனை அலமாரிகளிலிருந்து தாமாகவே முன்வந்து அகற்றியுள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட பொருட்கள் சிங்கப்பூரில் தொடர்ந்து விற்பனை செய்யப்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு இறக்குமதியாளர்களுக்கு உணவு முகமை அறிவுறுத்தியுள்ளது. பொதுமக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இந்த விவகாரத்தைத் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

பாட்டுலின் (Patulin) என்பது பூஞ்சைகளால் உற்பத்தி செய்யப்படும் நச்சுப்பொருளாகும். இது பெரும்பாலும் அழுகிய ஆப்பிள்கள் மற்றும் ஆப்பிள் சார்ந்த உணவுப் பொருட்களில் காணப்படுகிறது.

இந்த நச்சுப்பொருள் வெப்பத்தைத் தாங்கக்கூடிய தன்மை கொண்டது என்பதால், உணவுப் பொருட்கள் பதப்படுத்தப்பட்ட பிறகும் அதில் தங்கியிருக்க வாய்ப்புள்ளது. அதிக அளவில் பாட்டுலின் நச்சு உடலில் சென்றால், குமட்டல், செரிமானக் கோளாறுகள் மற்றும் வாந்தி உள்ளிட்ட உடல்நலப் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட ஆப்பிள் ஜூஸை ஏற்கனவே வாங்கியவர்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதனைப் பருக வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஏற்கனவே அந்த ஜூஸை அருந்தியவர்கள் தங்களது உடல்நலம் குறித்து கவலை கொண்டால், உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். மேலும், அந்தப் பொருளை வாங்கிய கடை அல்லது சில்லறை விற்பனையாளர்களைத் தொடர்புகொண்டு உரிய விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

ஆப்பிள் ஜூஸ் வாங்கும் நுகர்வோர் அதன் தயாரிப்பு விவரங்களையும், பாதிக்கப்பட்ட தொகுப்புகளுக்கான அறிவிப்புகளையும் கவனமாகச் சரிபார்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.