சிங்கப்பூரில் முதியவர்களைக் குறிவைக்கும் மோசடிக் கும்பல்!! காவல்துறை கடும் எச்சரிக்கை..!!

சிங்கப்பூரில் முதியவர்களைக் குறிவைக்கும் மோசடிக் கும்பல்!! காவல்துறை கடும் எச்சரிக்கை..!!

சிங்கப்பூரில் அரசு அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டம் செய்து, இரண்டு மூதாட்டிகளிடம் பணம் மற்றும் தங்க நகைகளைப் பறித்த மோசடிக் கும்பலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இரண்டு மலேசிய இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக இருவரும் நவம்பர் 21ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

முதல் சம்பவத்தில், 72 வயது மூதாட்டி ஒருவருக்கு நவம்பர் 17ஆம் தேதி SIMBA தொலைத்தொடர்பு நிறுவனத்தின் பிரதிநிதி என்று கூறிக்கொண்ட நபர் ஒருவர் தொலைபேசியில் அழைத்துள்ளார். அவரது வங்கிக் கணக்கிலிருந்து யாரோ ஒருவர் 9,000 டாலர்களை மாற்ற முயற்சிப்பதாகக் கூறி, பணவியல் ஆணையத்திடம் புகார் அளிக்க உதவுவதாகத் தெரிவித்துள்ளார்.

இதனை நம்பிய மூதாட்டி, தனது வங்கிக் கணக்கு தொடர்பான விவரங்களை அந்த நபரிடம் வழங்கியுள்ளார். தொடர்ந்து, காவல்துறை சீருடை அணிந்திருந்த மற்றொரு நபர் வாட்ஸ்அப் வீடியோ அழைப்பில் தொடர்புகொண்டு, தான் ஹாங்காங் பணவியல் ஆணையத்தின் (HKMA) அதிகாரி என அறிமுகப்படுத்தியுள்ளார்.

மேலும், மூதாட்டியிடம் இருந்த தங்க நகைகளைப் புகைப்படம் எடுத்து, தங்களது முகவரிடம் ஒப்படைக்குமாறு வற்புறுத்தியுள்ளார். இதையடுத்து, HDB குடியிருப்பின் தரைத்தளத்தில் 20 வயது இளைஞர் ஒருவரைச் சந்தித்த மூதாட்டி, சுமார் 10,000 டாலர் மதிப்புள்ள தங்க நகைகளை அவரிடம் ஒப்படைத்துள்ளார்.

இதேபோன்று, மற்றொரு 72 வயது மூதாட்டியும் மோசடிக் கும்பலிடம் பணத்தை இழந்துள்ளார். நவம்பர் 15ஆம் தேதி, யூனியன்பே (UnionPay) நிறுவன ஊழியர் என்று கூறிக்கொண்ட ஒருவர் அவரைத் தொடர்புகொண்டு, அவர் காப்பீட்டுத் திட்டம் ஒன்றை வாங்கியிருப்பதாகவும், அதனை ரத்து செய்ய ஹாங்காங் பணவியல் ஆணையத்தைத் தொடர்புகொள்ளுமாறும் தெரிவித்துள்ளார்.

அதன்பிறகு, HKMA அதிகாரி என்று கூறிக்கொண்ட மற்றொரு நபர் அவரை அழைத்து, அவரது வங்கிக் கணக்கு பணமோசடி வழக்கில் தொடர்புடையதாக இருப்பதாகவும், விசாரணைக்காகக் கணக்கு முடக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால் அச்சமடைந்த மூதாட்டி, தனது சேமிப்புப் பணத்தை எடுத்து முகவர்களிடம் ஒப்படைக்குமாறு கூறப்பட்டதை நம்பியுள்ளார். நவம்பர் 16ஆம் தேதி வங்கியிலிருந்து 9,000 டாலர்களை எடுத்து அடையாளம் தெரியாத சீன நபர் ஒருவரிடம் கொடுத்துள்ளார்.

மறுநாள் மேலும் 9,000 டாலர்களை எடுத்து, தனது HDB குடியிருப்பின் தரைத்தளத்தில் இருந்த 20 வயது இளைஞரிடம் ஒப்படைத்துள்ளார். இதன் மூலம் மொத்தம் 18,000 டாலர்களை அவர் இழந்துள்ளார்.

இரண்டு சம்பவங்கள் குறித்தும் விசாரணை நடத்திய காவல்துறையினர், பாதிக்கப்பட்ட இரு மூதாட்டிகளிடமும் நேரடியாகப் பணம் மற்றும் நகைகளைப் பெற்ற 20 வயது இளைஞரின் அடையாளத்தைக் கண்டறிந்தனர். இதையடுத்து, நவம்பர் 19ஆம் தேதி அவரைக் கைது செய்தனர்.

மேலும், அவருடன் தொடர்புடையவர் என நம்பப்படும் மற்றொரு 20 வயது மலேசிய இளைஞரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், பன்னாட்டு மோசடிக் கும்பலைச் சேர்ந்த அடையாளம் தெரியாத நபர்கள், பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களைச் சேகரித்து, பின்னர் அவற்றை மற்ற நபர்களிடம் ஒப்படைக்குமாறு இந்த இரண்டு இளைஞர்களுக்கும் அறிவுறுத்தியிருப்பது தெரியவந்துள்ளது.

குற்றச்செயல்கள் மூலம் கிடைத்த வருமானத்தை மற்றவர்கள் தக்கவைத்துக்கொள்ள உதவும் வகையில் சதித்திட்டம் தீட்டியதாக இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட உள்ளது.

இந்தக் குற்றச்சாட்டில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது 500,000 டாலர் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பணம், தங்கம் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களைச் சேகரிக்கும் மோசடிக் கும்பல்களுக்கு உதவுவதற்காக அதிக எண்ணிக்கையிலான மலேசியக் குடிமக்கள் சிங்கப்பூருக்குள் நுழைந்து வருவதாகக் காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், மோசடியில் நேரடியாக ஈடுபடுபவர்கள், மோசடிக் கும்பல்களின் உறுப்பினர்கள் மற்றும் ஆள் சேர்ப்பவர்களுக்கு குறைந்தபட்சம் 6 முதல் 24 பிரம்படிகள் வரை தண்டனை விதிக்கப்படலாம் என்றும், பணமோசடிக்கு உதவும் பணக் கடத்தல்காரர்களுக்கு 12 பிரம்படிகள் வரை விதிக்கப்படலாம் என்றும் எச்சரித்துள்ளது.

அடையாளம் தெரியாத நபர்களிடம் பணம் அல்லது தங்க நகைகள் உள்ளிட்ட மதிப்புமிக்க பொருட்களை ஒப்படைக்க வேண்டாம் என்றும், உரிய சரிபார்ப்பு இல்லாமல் வங்கிக் கணக்கு மற்றும் உள்நுழைவு விவரங்களைப் பகிர வேண்டாம் என்றும் காவல்துறை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

அரசு அதிகாரிகள் ஒருபோதும் பணப் பரிமாற்றம் செய்யுமாறு கோரமாட்டார்கள். வங்கிப் பதிவுகள் தொடர்பான ரகசியத் தகவல்களைக் கேட்கவோ, தொலைபேசி அழைப்புகளை காவல்துறைக்கு மாற்றுமாறு கூறவோ மாட்டார்கள் என்றும் அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

மோசடிக் கும்பல்களின் இத்தகைய நடவடிக்கைகளைச் சிங்கப்பூர் காவல்துறை கடுமையாக ஒடுக்கும் என்றும் எச்சரித்துள்ளது.