NTU கன்பூசியஸ் கல்வி நிறுவனத்தில் மாற்றம்..!! பிப்ரவரி முதல் வகுப்புகள் நிறுத்தம்!


சிங்கப்பூர்: நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (NTU) கீழ் செயல்பட்டு வரும் கன்பூசியஸ் கல்வி நிறுவனம், தனது கல்வி மற்றும் கலாசாரப் பணிகளில் மாற்றம் செய்து, ஆராய்ச்சி நிறுவனமாகச் செயல்படவுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் அனைத்து பயிற்சி வகுப்புகளும் நிறுத்தப்படுகின்றன. இனி புதிய வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறாது என்றும் நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த 2005ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், சிங்கப்பூர் மற்றும் சீன அரசுகளுக்கு இடையிலான கல்வி ஒத்துழைப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளாக குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக சீன மொழி, கலாசாரம், கல்வி மற்றும் ஆசிரியர் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பாடத்திட்டங்களை வழங்கி வந்தது.
இந்த நிறுவனத்துக்கும் சீனாவின் ஷான்டாங் பல்கலைக்கழகத்துக்கும் இடையிலான முந்தைய ஒப்பந்தம் கடந்த ஜூலை 26ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து, இரு பல்கலைக்கழகங்களும் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
புதிய ஒத்துழைப்பின் கீழ், செயற்கை நுண்ணறிவு (AI), மின்னிலக்கப் புத்தாக்கம், ஆராய்ச்சி மற்றும் கல்விப் பரிமாற்றம் போன்ற துறைகளில் கவனம் செலுத்தப்படவுள்ளது. உலகளவில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சித் தேவைகளுக்கு ஏற்ப இந்த மாற்றம் மேற்கொள்ளப்படுவதாக NTU தெரிவித்துள்ளது.
தற்போது கன்பூசியஸ் கல்வி நிறுவனம் வழங்கி வரும் அரசாங்கக் கட்டண மானியத்திற்குத் தகுதியான சில வயது வந்தோருக்கான சீன மொழிப் பாடத்திட்டங்களை, NTU-வின் தொழில்முறை மற்றும் தொடர்கல்வி அகாடமியான PACE ஏற்றுக்கொள்ளவுள்ளது.
இதில் சீன மொழி கற்பித்தல் தொடர்பான டிப்ளமோ பாடத்திட்டம் மற்றும் வணிகச் சீன மொழிப் பாடத்திட்டம் ஆகியவை இடம்பெற வாய்ப்புள்ளது. எந்தெந்த பாடத்திட்டங்கள் தொடரும், அவை எப்போது மீண்டும் தொடங்கும் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
ஏற்கெனவே பயிற்சிகளில் சேர்ந்துள்ள மாணவர்களின் படிப்புகள் பாதிக்கப்படாது என்றும், அவர்கள் திட்டமிட்டபடி தங்களது பாடத்திட்டங்களை முழுமையாக நிறைவு செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்றும் நிறுவனம் உறுதியளித்துள்ளது.
மேலும், புதிய ஆராய்ச்சி நிறுவனமாக மாறுவதற்கு முன்பு ஏற்கெனவே திட்டமிடப்பட்டுள்ள நிகழ்ச்சிகள் மற்றும் செயல்பாடுகள் அனைத்தும் நிறைவு செய்யப்படும் என NTU தெரிவித்துள்ளது.
கல்வி மற்றும் கலாசாரப் பயிற்சிகளை வழங்கி வந்த கன்பூசியஸ் நிறுவனம், இனி ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தவுள்ளது.
Follow us on :
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
