சிங்கப்பூர் யிஷூனில் திடீர் தீ விபத்து..!தீயில் கருகிய கார்..மேலும் 2 கார்களும் சேதம்!


சிங்கப்பூரின் யிஷூன் பகுதியில் உள்ள திறந்தவெளி கார் நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் கார் ஒன்று தீப்பற்றி எரிந்ததுடன், அதன் அருகில் நிறுத்தப்பட்டிருந்த மேலும் இரண்டு கார்களும் சேதமடைந்தன. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்தச் சம்பவம் நவம்பர் 22ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை சுமார் 6:55 மணியளவில் யிஷூன் ஸ்ட்ரீட் 22, புளோக் 270க்கு முன்புள்ள திறந்தவெளி கார் நிறுத்துமிடத்தில் நிகழ்ந்தது.
அங்கு நிறுத்தப்பட்டிருந்த பல்நோக்கு வாகனம் (MPV) ஒன்றின் முன்பகுதியில் திடீரென தீப்பற்றியது. சிறிது நேரத்திலேயே தீ மளமளவெனப் பரவி, வாகனத்தின் முன்பகுதி முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதனால் அப்பகுதியில் அதிக அளவில் கரும்புகை வெளியேறியது.
சமூக வலைத்தளத்தில் வெளியான காணொளியில், தீப்பற்றி எரிந்துகொண்டிருந்த காரை ஒருவர் தீயணைப்புக் கருவியைக் கொண்டு அணைக்க முயற்சி செய்வது பதிவாகியுள்ளது. இருப்பினும், அவரது முயற்சி பலனளிக்கவில்லை. இதையடுத்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் (SCDF) சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
தீயணைப்புக் குழாயைப் பயன்படுத்தி தீயை அணைத்த அதிகாரிகள், தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தினர். இருப்பினும், தீயில் சிக்கிய பல்நோக்கு வாகனம் கடுமையாகச் சேதமடைந்தது.
சம்பவத்திற்குப் பின்னர் வெளியான புகைப்படங்களில், அந்த வாகனத்தின் முன்பகுதி கிட்டத்தட்ட முழுமையாக எரிந்து கருகியிருப்பது தெரிகிறது. காரின் முன்புற மூடி (Bonnet) கருமையாக மாறியதுடன், அதன் உட்புற இயந்திரப் பாகங்களும் வெளியே தெரியும் அளவுக்குத் தீயால் சேதமடைந்திருந்தன.
மேலும், தீப்பற்றி எரிந்த காரின் இருபுறங்களிலும் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்களுக்கும் தீ பரவியதால் அவையும் பாதிக்கப்பட்டன. குறிப்பாக, அந்த வாகனங்களின் முன்பகுதி மற்றும் முகப்பு விளக்குகளில் தீயால் ஏற்பட்ட சேதங்கள் தெளிவாகக் காணப்பட்டன.
இதுகுறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியதாவது, காரின் இயந்திரப் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதாகக் குறிப்பிட்டது. தீப்பற்றி எரிந்த வாகனத்தின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த மேலும் இரண்டு கார்களும் இந்தத் தீ விபத்தால் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்து முழுமையாக அணைத்தனர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், காரின் இயந்திரப் பகுதியில் தீ எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் யிஷூன் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow us on :
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
