கழிப்பறையில் அருகில் நின்ற நபரின் சந்தேக நடவடிக்கை.. கைப்பேசியில் சிக்கிய அதிர்ச்சி ஆதாரம்!


சிங்கப்பூரில் உள்ள ஒரு வணிக வளாகத்தின் கழிப்பறையில் சிறுநீர் கழித்துக்கொண்டிருந்த ஆண் ஒருவரை, அருகில் இருந்த மற்றொரு நபர் ரகசியமாகப் படம் பிடிக்க முயன்றதாகச் சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்தச் சம்பவம் நவம்பர் 5ஆம் தேதி நடைபெற்றுள்ளது. 30 வயதைக் கடந்த யூ (Yu) என்ற வேலையில்லாத நபர், தனக்கு நேர்ந்த அனுபவத்தை TikTok சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அவர் கழிப்பறையில் சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தபோது, அருகில் நின்றிருந்த மற்றொரு நபரின் நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, கழிப்பறையில் வேறு சிறுநீர் கழிக்கும் இடங்கள் காலியாக இருந்தபோதிலும், அந்த நபர் வேண்டுமென்றே தனக்கு அருகில் வந்து நின்றதாகக் கூறப்படுகிறது.
மேலும், அந்த நபர் நீண்ட நேரமாகக் கழிப்பறையிலேயே இருந்ததுடன், கையில் கைப்பேசியை வைத்துக்கொண்டு சுற்றுப்புறத்தை அடிக்கடி கவனித்துள்ளார். கைப்பேசியின் கேமரா கோணமும் தன்னை நோக்கியிருப்பது போன்ற சந்தேகத்தை ஏற்படுத்தியதாக யூ தெரிவித்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த அவர், அந்த நபரிடம் நேரடியாகக் கேள்வி எழுப்பியதுடன், அவரது கைப்பேசியையும் எடுத்துப் பார்த்துள்ளார். ஆனால், அந்த நபர் தான் படம் பிடிக்கவில்லை என்று மறுத்துள்ளார்.
பின்னர் கைப்பேசியின் புகைப்படத் தொகுப்பைப் பார்க்க அனுமதிப்பதாகக் கூறியபோதும், ஆதாரங்களை அழித்துவிடலாம் அல்லது தப்பிச் செல்லலாம் என்ற அச்சத்தில் யூ அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
தொடர்ந்து, அந்த நபரின் புகைப்படத்தைத் தனது கைப்பேசியில் பதிவு செய்ய முயன்றபோது, அவர் முகத்தை மறைத்துக்கொண்டு கழிப்பறையின் தனியறைக்குள் சென்றுள்ளார். இதையடுத்து, அங்கிருந்த துப்புரவுப் பணியாளரிடம் விவரத்தைத் தெரிவித்து, காவல்துறைக்குத் தகவல் அளித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது, சந்தேக நபரின் கைப்பேசியில் யூவின் புகைப்படம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்தக் கைப்பேசியை காவல்துறையினர் விசாரணைக்காகக் கைப்பற்றியுள்ளனர்.
இது போன்ற சம்பவங்களை எதிர்கொள்ளும் நபர்கள் வெட்கம் அல்லது பயம் காரணமாக அமைதியாக இருக்க வேண்டாம் என்றும், தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொண்டு காவல்துறையிடம் புகார் அளிக்க வேண்டும் என்றும் யூ வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இதுபோன்ற சூழலில் சந்தேக நபரின் கைப்பேசியில் உள்ள ஆதாரங்களை அழிக்காமல் பாதுகாப்பது முக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Follow us on :
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
