நெட்டிசன்கள் அதிர்ச்சி...!!!சிங்கப்பூரை அதிரவைத்த மர்ம ஒளி பந்துகள்...!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பாசிர் ரிஸ், தெம்பனிஸ் மற்றும் யிஷூன் ஆகிய இடங்களில் மர்மமான ஊதா நிற ஒளி பந்துகள் தோன்றியதாகக் கூறும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி, நெட்டிசன்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
டிக்டோக்கில் வைரலான காட்சிகள்
நேற்று (19.09.25) வெளியிடப்பட்ட 15 வினாடி வீடியோவில், பாசிர் ரிஸ் பைஷா பூங்காவில் மர்மமான ஊதா ஒளி பந்து தோன்றி, காற்றில் நகர்ந்து, வெடிக்கும் சத்தங்களுடன் மின்னல் பறப்பது போல காட்சியளித்தது. அந்த வீடியோ ஏற்கனவே இணையத்தில் 1.2 மில்லியன் பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டது.
இதேபோன்று தெம்பெனிசில், டேஷ்கேமில் பதிவான காட்சியில், சாலையில் சென்று கொண்டிருந்த காரின் முன் திடீரென ஒளி பந்து தோன்றியது. பயணிகள் பதட்டத்தில் “காரை நிறுத்து! காரை நிறுத்து!” என்று கத்தும் காட்சியும் அதிர்ச்சியூட்டியது. வெறும் 14 மணி நேரத்தில் இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் அந்த வீடியோ பார்வையிடப்பட்டது.
அதேபோன்று யிஷூனில் எடுக்கப்பட்ட 14 வினாடி வீடியோவில், HDB தொகுதி அடித்தளத்தில் ஒளி பந்து தோன்றி, இரண்டு முறை ஒளிக்கற்றைகளை வெளியிட்டு வெடித்தது. கேமராவுக்கு வெளியே இருந்த பெண் “இது பயங்கரமானது” என்று அதிர்ச்சியடைந்தார். அந்த வீடியோவும் 6.9 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.
வல்லுநர்கள் கூறுவதப்படி, இது பந்து மின்னல் (Ball Lightning) எனப்படும் அரிய இயற்கை நிகழ்வு ஆகும். பொதுவாக ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறத்தில் காணப்படும் பந்து மின்னல், வெப்பநிலை அதிகரிக்கும் போது ஊதா அல்லது நீல நிறம் எடுக்கலாம்.
இது காற்றில் மிதந்து, மின்கம்பிகள் வழியாக நகரவோ அல்லது கதவுகள், ஜன்னல்கள் வழியாக அறைக்குள் செல்லவோ கூடும். சில நேரங்களில் அமைதியாக மறைந்து விடும்.சில நேரங்களில் வெடித்து பெரும் சத்தம் எழுப்பி காணாமல் போகும்.
ஆனால், இதுவரை பந்து மின்னலின் உருவாக்கம் குறித்து உறுதியான விளக்கம் இல்லை என்பதும், அதன் நிகழ்தகவு மிகவும் குறைவாக இருப்பதால் ஆய்வு செய்வது கடினம் என்பதும் வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஒரே நாளில் மூன்று பகுதிகளில் மர்ம ஒளி பந்துகள் தோன்றியது சந்தேகத்தை கிளப்பியுள்ளது. “இது உண்மையா? அல்லது AI மூலம் உருவாக்கப்பட்ட வீடியோக்களா?” என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால்,தெம்பனிஸ் பகுதியில் வெளியான டேஷ்கேம் காட்சியில் காரின் ஹூட்டில் ஒளியின் பிரதிபலிப்பு தெரிந்தது.யிஷூன் காட்சியில் கட்டிட தூண்கள் ஒளிர்ந்தது போன்ற காட்சிகளால் வீடியோ உண்மையானதாக இருக்கலாம் என்று சிலர் வாதிடுகின்றனர்.
“பந்து மின்னலை நேரடியாகக் காணும் போது கவனமாக இருக்க வேண்டும். இது சுவர்களைக் கூட தாண்டிச் செல்லக்கூடும் என்பதால் அவை தாக்கினால் விளைவுகள் மிகுந்த தீவிரம் ஏற்படக்கூடும்,” என்று இணையவாசிகள் எச்சரிக்கின்றனர்.
இச்சம்பவம் குறித்து தற்போது தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் விசாரணையில் ஈடுபட்டு வருகிறது.