சிங்கப்பூர் தொழிலதிபருக்கு பங்களாதேஷில் சிறை தண்டனை ..!!பின்னணி என்ன..??
சிங்கப்பூர் குடியுரிமைப் பெற்ற கோடீஸ்வர தொழிலதிபர் சைஃபுல் ஆலம் மசூத் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பங்களாதேஷ் நீதிமன்றம் 5 மாத சிறை தண்டனை விதித்துள்ளது.
பங்களாதேஷ் இஸ்லாமி வங்கியிடம் இருந்து பெற்ற 84.49 கோடி டாக்கா(S$8.8 மில்லியன்) கடனை திரும்ப செலுத்தாத குற்றத்திற்காக சாட்டோகிராம் நீதிமன்றம் இந்த தீர்ப்பை அவர்களுக்கு வழங்கியுள்ளது.
எஸ். ஆலம் குழுமத்தின் நிறுவனரான 66 வயது சைஃபுல் ஆலம் மசூத் , அவரது 54 வயதான மனைவி ஃபர்சானா பர்வீன் மற்றும் அவர்களது 32 வயது மகன் அசனல் ஆலம் ஆகியோர் இந்த தண்டனையை பெற்றுள்ளனர். இவர்கள் மூவருமே சிங்கப்பூர் குடியுரிமைப் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் மூவரும் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகாத நிலையிலேயே இந்த தண்டனை அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் ‘வோங் பார்ட்னர்ஷிப்’ நிறுவனத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் இந்த தண்டனை செல்லாது எனவும் இது நீதிக்கு எதிரானது எனவும் இந்த தண்டனையை எதிர்த்து வாதாடுகின்றனர்.
முறையாக தங்களுக்கு நீதிமன்ற அறிவிப்பு எதுவும் வரவில்லை; ஊடகங்கள் வாயிலாகவே இதை தாங்கள் அறிந்து கொண்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பங்களாதேஷ் வங்கியிடமிருந்து கடன் வாங்கியதாக கூறப்படும் ‘ஓஜி டிரேவல்ஸ்’ நிறுவனத்துக்கும் ஆலமின் எஸ் ஆலம் குழுமத்திற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை எனவும், ஆலம் அந்த நிறுவனத்தின் உரிமையாளரும் அல்ல எனவும் வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.