ICA அதிகாரிகள் போல் நடித்து மோசடி..! சிங்கப்பூர் காவல்துறை அவசர எச்சரிக்கை!
சிங்கப்பூர் அதிகாரிகளைப் போல் நடித்து S$6.1 மில்லியனை ஏமாற்றிய மோசடி கும்பல் குறித்துச் சிங்கப்பூர் காவல்துறை அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குடிவரவு மற்றும் சோதனைச்சாவடி ஆணையம் (ICA) மற்றும் வெளிநாட்டு அரசு அதிகாரிகளாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு பொதுமக்களை ஏமாற்றும் மோசடிச் செய்திகள் சமீபகாலமாகத் தீவிரமடைந்துள்ளன.
இந்த வகை மோசடிகளால் இதுவரை குறைந்தது 72 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப் பட்டவர்கள் ஒட்டுமொத்தமாக S$6.1 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை இழந்துள்ளதாகப் சிங்கப்பூர் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசடி நபர்கள் ICA அதிகாரிகள் போன்று பேசி, சம்பந்தப்பட்ட நபரின் தனிப்பட்ட அடையாள ஆவணங்கள் அல்லது தொலைபேசி எண்கள் சட்டவிரோதச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறி அச்சத்தை ஏற்படுத்துவார்கள்.
அதற்கு பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று மறுக்கும்போது, அந்த அழைப்பைச் சீனா போன்ற நாடுகளின் போலிப் புலனாய்வு அதிகாரிகளுக்கு அல்லது காவல்துறை அதிகாரிகளுக்கும் மிரட்டும் தோரணையில் மாற்றுவார்கள்.
பின்பு, கைது நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க அல்லது தீவிர விசாரணையிலிருந்து விடுவிக்கத் தற்காலிகமாகப் பணத்தை மாற்றவோ அல்லது பிணைத்தொகை செலுத்தவோ வேண்டும் என்று கூறிப் பெரிய தொகையைப் பறித்துவிடுவார்கள்.
சிங்கப்பூர் அல்லது வெளிநாட்டு அரசாங்க அதிகாரிகள் எப்போதுமே தொலைபேசி அல்லது இணையவழி அழைப்புகள் மூலம் பணப் பரிமாற்றம் செய்யவோ அல்லது வங்கிக் கணக்கு விவரங்களைக் கூறவோ மாட்டார்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.
இது போன்ற அழைப்புகள் வந்தால் உடனடியாகத் தொலைபேசி இணைப்பைத் துண்டிக்கவும், சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளைத் தடுத்து நிறுத்த ScamShield செயலியைப் பயன்படுத்திக் காவல்துறைக்குப் புகார் அளிக்கவும் ICA பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.