யிஷூனில் நடந்த பயங்கர விபத்து..!!ஒருவர் உயிரிழந்தது எப்படி..?
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் நேற்று (14.12.25) இரவு சுமார் 10:20 மணியளவில், யிஷூன் அவென்யூ 3 மற்றும் யிஷூன் மிடில் ரோடு சந்திப்பில் ஐந்து வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட பயங்கர விபத்து நிகழ்ந்தது.
இந்த விபத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள், இரண்டு கார்கள் மற்றும் ஒரு லாரி ஆகியவை அடங்கும். மோதலின் காரணமாக, மோட்டார் சைக்கிள்கள் முற்றிலுமாக நொறுங்கின.
சம்பவ இடத்திலேயே 20 வயதுடைய ஆண் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்ததாக சிவில் பாதுகாப்பு மருத்துவ பணியாளர்கள் உறுதி செய்தனர்.
மேலும்,19 வயதுடைய மற்றொரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மற்றொரு காயமடைந்த நபர் கூ டெக் புவாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் மூன்று பேருக்கு சிறிய காயங்கள் மட்டுமே ஏற்பட்டதால் அவர்கள் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்தனர்.
விபத்து நடந்த இடத்தின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட நிலையில், ஒரு லாரி முன்புறத்தில் நிறுத்தப்பட்டிருப்பதும், அதன் பின்னால் ஏர்பேக்குகள் திறந்த நிலையில் சிவப்பு நிற கார் இருப்பதும் காணப்பட்டது.
அந்த காரின் பின்னால் மோட்டார் சைக்கிள் ஒன்று கவிழ்ந்து, கடுமையாக சேதமடைந்திருந்தது.சம்பவ இடத்தில் தரையில் கிடந்த ஒருவரை சிவில் பாதுகாப்புப் பணியாளர்கள் பரிசோதித்தனர்.
இந்த விபத்து தொடர்பாக, ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் 38 வயது ஆண் ஓட்டுநர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.