காவல்துறையின் இரவு ரோந்தில் சிக்கிய 26 பேர்..!! காரணம்..??
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இன்று (18.12.25) குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக சந்தேகப்படும் 26 பேர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது.இந்த ஆண்டு ஜூலை முதல் நவம்பர் வரை மேற்கொள்ளப்பட்ட போக்குவரத்து கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது, 21 முதல் 61 வயதுக்குட்பட்ட நபர்கள் சுவாசப் பரிசோதனையில் தோல்வியடைந்ததாக காவல்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்குகளில், 34 மற்றும் 51 வயதுடைய இருவர் மீண்டும் மீண்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய குற்றத்தில் சிக்கியவர்கள் என தெரியவந்துள்ளது. இவர்கள்மீது கூடுதல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவுள்ள நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டால் கட்டாய சிறைத்தண்டனையை எதிர்கொள்ள நேரிடும்.
மேலும், 21 முதல் 34 வயதுக்குட்பட்ட மூன்று ஆண்கள் மீது குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் மட்டுமல்லாமல், வாகனம் ஓட்டும்போது தூங்கிவிடுதல்,சாலையில் வாகனத்தை நிறுத்தி போக்குவரத்திற்கு இடையூறு விளைவித்தல் மற்றும் பிற சாலைப் பயனாளர்களின் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்துதல் போன்ற குற்றங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது.இக்குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு அதிகபட்சமாக S$2,000 அபராதம், மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
சிங்கப்பூரில் குடிபோதையில் வாகனம் ஓட்டுவோருக்கு 2,000 முதல் 10,000 டாலர் வரை அபராதம், 12 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும். மீண்டும் மீண்டும் இதே குற்றத்தில் ஈடுபடுவோருக்கு அபராதம் இரட்டிப்பாக்கப்படுவதுடன், ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
குடிபோதையில் வாகனம் ஓட்டுவது மிகவும் ஆபத்தானதும், பொறுப்பற்ற செயலுமாகும் என காவல்துறை மீண்டும் ஒருமுறை ஓட்டுநர்களை எச்சரித்துள்ளது. சாலை பாதுகாப்பை உறுதி செய்ய, விதிமீறல்களில் ஈடுபடுவோர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயங்கமாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளது.