பரபரப்பு..!! மத்திய விரைவுச் சாலையில் சிறை வாகனம் விபத்து..!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரின் மத்திய விரைவுச் சாலையில் (CTE) சிங்கப்பூர் சிறைச்சாலை சேவை வாகனம் இரண்டு கார்களுடன் பின்புறமாக மோதிய விபத்தில், ஒரு கைதியும் இரண்டு துணை அதிகாரிகளும் சிறு காயங்களுடன் தப்பினர்.
இந்த விபத்து நேற்று (19.12.25) ஜாலான் பஹாகியா வெளியேறும் இடத்தைத் தாண்டி, சிலேதார் விரைவுச் சாலையை நோக்கிச் சென்றபோது நிகழ்ந்ததாக சிறைச்சாலை சேவை தெரிவித்துள்ளது.
அப்போது, டான் டோக் செங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்த ஒரு கைதியையும்,அவருடன் இரண்டு பாதுகாவலர்களையும் சிறை வாகனம் செலாராங் பூங்கா வளாகத்துக்குத் திரும்ப அழைத்துச் சென்றுகொண்டிருந்தது.
பயணத்தின் போது, சிறை வாகனம் முன்னால் சென்ற ஒரு காரின் பின்புறத்தில் மோதியதுடன், அந்த கார் முன் சென்ற மற்றொரு வாகனத்தின் மீது மோதியது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, சிறைச்சாலை சேவை உடனடியாக சிவில் பாதுகாப்புப் படை மற்றும் காவல்துறையை அழைத்து உதவி கோரியது.
விபத்துக்குப் பிறகு கைதியும், ஒரு துணை அதிகாரியும் வாகனத்தின் பின்புறத்தில் சிக்கிக் கொண்ட நிலையில், சிவில் பாதுகாப்புப் படையினர் ஹைட்ராலிக் மீட்பு உபகரணங்களைப் பயன்படுத்தி அவர்களை பாதுகாப்பாக மீட்டனர்.
சம்பவ இடத்திலேயே செய்யப்பட்ட மருத்துவ மதிப்பீட்டில், கைதிக்கு சிறிய காயங்கள் மட்டுமே ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டு, அவர் சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். விபத்தில் காயமடைந்த இரண்டு துணை அதிகாரிகளும் சிகிச்சை பெற்றுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், சிறை அதிகாரிகள் அதற்குத் தேவையான முழு ஒத்துழைப்பையும் வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.