முன்னாள் வழக்கறிஞர் எம்.ரவியின் மரண வழக்கில் அதிர்ச்சி திருப்பம்..!!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் முன்னாள் வழக்கறிஞர் எம். ரவி (56), புதன்கிழமை (24.12.25) அதிகாலை சுயநினைவிழந்த நிலையில் டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் சிங்கப்பூர் சட்ட மற்றும் சமூக வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், அவர் தனது வீட்டில் ஒரு நண்பருடன் இருந்தபோது போதைப்பொருள் பயன்படுத்தியதாக தெரியவந்துள்ளது.
எம். ரவி மயக்க நிலைக்கு சென்றதைத் தொடர்ந்து, உடன் இருந்த நண்பரே சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு அவசர உதவிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
சம்பவ இடத்துக்கு வந்த மீட்புப் படையினர் உடனடியாக அவருக்கு முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
காவல்துறையிடம் அளித்த வாக்குமூலத்தில், அந்த நண்பர் இருவரும் சில மணி நேரங்களுக்கு முன்பு போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும், அதற்குப் பிறகு எம். ரவி திடீரென சுயநினைவை இழந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், மரணத்திற்கான துல்லியமான காரணத்தை உறுதி செய்ய உடற்கூராய்வு நடத்தப்படும் என்றும், அதன் முடிவுகளுக்குப் பிறகே முழு விவரங்கள் வெளியிடப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் போதைப்பொருள் பயன்பாட்டின் அபாயங்களை மீண்டும் நினைவூட்டுவதாக அமைந்துள்ள நிலையில், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.