டெங்குவை முன்கூட்டியே கண்டறிய உதவும் புதிய கண்டுபிடிப்பு..!!!

டெங்குவை முன்கூட்டியே கண்டறிய உதவும் புதிய கண்டுபிடிப்பு..!!!

சிங்கப்பூர்: டெங்குக் காய்ச்சலை சிறுநீர் பரிசோதனை வழியாக கண்டறியும் புதிய முறையை சிங்கப்பூர் மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆய்வு,டெங்கு நோயின் தீவிரத்தை ரத்தப் பரிசோதனை இல்லாமலே அறிய உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது மருத்துவ உலகில் ஒரு முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.

இந்த ஆய்வை தேசிய தொற்றுநோய் நிலைய ஆய்வகத்தின் தலைவர் டாக்டர் சியா பொ யிங் மற்றும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் லீ கொங் சியான் மருத்துவப் பள்ளியின் மூத்த ஆய்வாளர் டாக்டர் அன்ட்ரூ டியோ ஆகியோர் முன்னெடுத்துள்ளனர். மொத்தம் 125 டெங்கு நோயாளிகளின் சிறுநீர் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு முடிவுகள் பெறப்பட்டன.

சிறுநீரில் உள்ள குறிப்பிட்ட புரதங்களை ஆய்வு செய்வதன் மூலம், டெங்கு காய்ச்சலின் அளவு மற்றும் தீவிரத்தை துல்லியமாக அறிய முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.இதுவரை டெங்கு காய்ச்சலை கண்டறிய ரத்தப் பரிசோதனைகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், இந்த புதிய முறை பெரிய மாற்றத்தைக் கொண்டு வருகிறது.

இந்த சிறுநீர் பரிசோதனை முறையை ஒருவரின் வீட்டிலேயே செய்துகொள்ள முடியும் என்பதே இதன் முக்கிய சிறப்பம்சமாகும். இதனால் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவசியம் குறையும் என்றும், நோயாளிகளுக்கு உடனடியாக காய்ச்சலுக்கான சிகிச்சையை ஏற்பாடு செய்ய முடியும் என்றும் நம்பப்படுகிறது.

இந்த ஆய்வின் முடிவுகள் ஜனவரி 9ஆம் தேதி Open Forum Infectious Diseases என்ற அறிவியல் மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளன. இருப்பினும், இந்தச் சோதனை கருவிகள் பொதுப் பயன்பாட்டுக்கு வர இன்னும் ஐந்து ஆண்டுகள் வரை ஆகலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எதிர்காலத்தில் இந்த புதிய பரிசோதனை முறைக்கு அனைத்துலக அங்கீகாரம் பெறுவதுடன், உலகின் தொலைதூர பகுதிகளில் செயல்படும் சமூக மருத்துவ சேவையாளர்களுக்கும் இது பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு வலுவான ஆதரவு கிடைக்கும் என ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.