சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..!!
ஷார்ஜாவில் இருந்து சென்னை வந்த ஏர் அரேபியா விமானம் தரையிறங்கிய போது, திடீரென பயணி ஒருவர் அவசர கால கதவை திறந்ததால் பரபரப்பு நிலவியது.
இந்த விமானத்தில் ஏறக்குறைய 231 பயணிகள் இருந்தனர். மே மூன்றாம் தேதி அன்று அதிகாலை நேரம் சென்னை அனைத்து உலக விமான நிலையத்தின் ஓடுபாதையில் விமானம் தரை இறங்கியது.
விமானம் மெதுவாக தரைப்பகுதியில் நகர்ந்து கொண்டிருந்த தருணத்தில் யாரும் எதிர்பாராத விதமாக, புதுக்கோட்டையைச் சேர்ந்த 34 வயது ஆடவர் அவசரகால கதவுகளில் ஒன்றை வலுக்கட்டாயமாக திறந்துள்ளார்.
இதனைக் கண்ட சக பயணிகள் அதிர்ச்சியில் சத்தமிடமே விமானி, விமானத்தை நிறுத்திவிட்டு கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக அவசர தகவல் அளித்தார்.
துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படை வீரர்களும் வெடிகுண்டு நிபுணர்களும் விமானம் நின்ற பகுதிக்கு உடனடியாக வந்த சம்பந்தப்பட்ட பயணியை விரைவாக கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் அந்த பயணியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். விமான பாதுகாப்பு விதிகளை கடுமையாக மீறிய அந்த பயணியின் மனநிலை குறித்து மருத்துவ வல்லுனர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.