மூதாட்டியை கொடுமைப்படுத்திய வழக்கு..!! நீதிமன்றம் விடுத்த கடும் தண்டனை..!!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்ட 90 வயது மூதாட்டியை கொடூரமாக துஷ்பிரயோகம் செய்த பர்மிய பணிப்பெண்ணுக்கு,நீதிமன்றம் 52 வார சிறைத்தண்டனை விதித்துள்ளது.
அந்த மூதாட்டி அரை நிர்வாண நிலையில் இருந்தபோதும் அறைந்தது,டயப்பர்களால் அடித்தது உள்ளிட்ட பல வன்முறைச் செயல்கள்,நடைபெற்றதாக நீதிமன்றத்தில் தெரியவந்தது.
49 வயதான நிவே நிவே சான் என்ற பர்மியப் பணிப்பெண், மொழிபெயர்ப்பாளர் மூலம் பாதிக்கப்படக்கூடிய நபருக்கு வேண்டுமென்றே தீங்கு விளைவித்ததாக இரண்டு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, நேற்று (13.01.26)) அவருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
மூதாட்டி மீது நடத்திய துஷ்பிரயோகங்கள் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, நீதிமன்றத்தில் ஒளிபரப்பப்பட்டன. அந்தக் காட்சிகளில், பலவீனமான மூதாட்டி தாக்குதலிலிருந்து தன்னைப் பாதுகாக்க மீண்டும் மீண்டும் கைகளை உயர்த்தும் காட்சி இடம்பெற்றிருந்தது.
டிமென்ஷியா நோயால் அவதிப்பட்டு வந்த அந்த மூதாட்டிக்கு பேசுவதிலும் புரிந்துகொள்வதிலும் கடும் சிரமம் இருந்ததாகவும், நடமாட்டத்திற்கு உதவி தேவைப்பட்டதாகவும், டயப்பர் பயன்படுத்தும் நிலையில் இருந்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
2017 ஆம் ஆண்டு, தனது தாயாரைப் பராமரிக்க மகன் இந்தப் பணிப்பெண்ணை வேலைக்கு அமர்த்தியுள்ளார். கடந்த ஆண்டு ஜூலை 9 ஆம் தேதி, வீட்டிற்கு வந்தபோது சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த மகன், தாயார் மீது நடந்த துஷ்பிரயோகத்தை கண்டறிந்தார். பின்னர், ஜூலை 30 ஆம் தேதி, மூதாட்டி சிறுநீர் பாதை தொற்றுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவரது உடலில் பல காயங்கள் இருப்பது தெரியவந்தது.
மருத்துவர்கள், மூதாட்டியின் விலா எலும்புகளில் பல முறிவுகள் இருப்பதை உறுதிப்படுத்தினர். சம்பவத்தின் தீவிரத்தை உணர்ந்த மகன், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் தேதி காவல்துறையில் புகார் அளித்தார்.
நீதிமன்ற ஆவணங்களின்படி, ஜூலை 16 அன்று, பணிப்பெண் மூதாட்டியின் முழங்காலில் உதைத்து, தலையில் குத்தி, சட்டையைப் பிடித்து சோபாவில் தள்ளியுள்ளார். தலைமுடியைப் பிடித்து இழுத்து, அறைந்து, டயப்பரால் கைகளில் அடித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஜூலை 28 அன்று, டயப்பர் மாற்றும் போது, மூதாட்டி அரை நிர்வாண நிலையில் இருந்தபோது கூட வன்முறை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது.
தன்னைச் சுற்றிய சூழ்நிலையால் விரக்தியடைந்ததாகவும், தனியாக பராமரிப்பதில் மனஅழுத்தம் ஏற்பட்டதாகவும் பிரதிவாதி ஒப்புக்கொண்டார். இருப்பினும், “நோய்வாய்ப்பட்ட முதியவரைப் பராமரிப்பது சவாலானதாக இருந்தாலும், துஷ்பிரயோகம் எந்த விதத்திலும் நியாயமானது அல்ல” என்று நீதிபதி கடுமையாக சுட்டிக்காட்டினார்.