அபாயம்...!!! இளைஞர்களை கவரும் போலி சிகரெட்டுகள்...!!!
சிங்கப்பூர்: மின்-சிகரெட்டுகள் தடை செய்யப்பட்டுள்ள சிங்கப்பூரில், தற்போது “வைட்டமின் டிஃப்பியூசர்கள்”என்ற பெயரில் புதிய போலி புகையிலை தயாரிப்புகள் ஆன்லைனில் விற்பனைக்கு வந்துள்ளன.
இதுகுறித்து சுகாதார அறிவியல் ஆணையம் (HSA) தெரிவித்ததாவது, இவை மின்-சிகரெட்டுகளைப் போலவே தோற்றமளித்தாலும், சட்டவிரோதமானவை. “வைட்டமின் சிகரெட்டுகள்” என்ற பெயரில் விற்கப்படும் இந்த சாதனங்களில், நுகர்வுக்கு ஏற்றாத பொருட்கள் இருக்கக்கூடும்; நீண்ட கால பயன்பாடு உடல்நல அபாயத்தை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளது.
இவை பாதிப்பில்லாதவை போல தோன்றினாலும், குறிப்பாக இளைஞர்களை புகை பிடிக்கும் பழக்கத்திற்கும்,போதைப் பொருட்கள் நோக்கியும் வழி நடத்தும் அபாயம் உள்ளது என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
புகையிலை (விளம்பரங்கள் & விற்பனை கட்டுப்பாடு) சட்டத்தின் கீழ், இத்தகைய போலி புகையிலை பொருட்களைப் பயன்படுத்தினாலோ வைத்திருந்தாலோ, $2,000 வரை அபராதம் விதிக்கப்படும்.
ஏப்ரல் முதல் ஜூன் 2025 வரை, ஆன்லைன் விற்பனை தளங்கள், சமூக ஊடகங்கள் ஆகியவற்றில் கண்டறியப்பட்ட 2,000-க்கும் மேற்பட்ட விளம்பரங்கள், இடுகைகள் அதிகாரிகளால் நீக்கப்பட்டுள்ளன.
“போலி புகையிலை பொருட்கள் எந்த வகையிலும் பாதுகாப்பானவை அல்ல. பொதுமக்கள் இவற்றைத் தவிர்க்க வேண்டும்.” என HSA வலியுறுத்தியுள்ளது.