சிங்கப்பூர்: சிங்கப்பூரில் எட்டோமிடேட் போன்ற கட்டுப்படுத்தப்பட்ட மருந்துகள் கொண்ட மின்-சிகரெட்டுகளை துஷ்பிரயோகம் செய்பவர்கள், குறிப்பாக 21 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், இனி கட்டாய மேற்பார்வைத் திட்டம் கீழ் வைக்கப்படுவார்கள்.
முதல் முறை குற்றவாளிகளுக்கு 3 மாதங்கள் தீவிர கண்காணிப்பு மற்றும் 8 முதல் 10 வரை ஆலோசனை அமர்வுகள் வழங்கப்படும். மறுமுறை குற்றவாளிகளுக்கு இந்தக் காலம் 6 மாதங்கள் ஆக நீட்டிக்கப்படும்; குறைந்தது 16 ஆலோசனை அமர்வுகள் கட்டாயமாக்கப்படும். இந்த காலத்தில் சுகாதார அறிவியல் ஆணையம் மேற்பார்வை மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.
மூத்த நாடாளுமன்றச் செயலாளர் சுவா ரூய் லாங் தெரிவித்ததாவது,“இளைஞர்கள் இ-சிகரெட்டுகளை துஷ்பிரயோகம் செய்வது அவர்களின் உடல்நலத்தையும், குடும்பத்தினரையும் பாதிக்கிறது. அரசாங்கம் செய்யும் பங்கு, இளைஞர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் தேவையான ஆதரவை வழங்குவதே” என்றார்.
மேலும், மறுவாழ்வு செயல்முறையில் குடும்ப உறுப்பினர்களின் பங்கு மிகவும் அவசியம் என்றும், தேவைப்படும் குடும்பங்களுக்கு சமூக சேவை அலுவலகங்கள் மற்றும் குடும்ப சேவை மையங்கள் மூலம் உதவி வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இத்திட்டம், இளைஞர்களும் குடும்பங்களும் போதைப் பொருள் அபாயங்களை புரிந்து போதை இல்லா ஆரோக்கியமான வாழ்க்கையைத் தேர்வு செய்ய வழிகாட்டுவதே பிரதான நோக்கமாக கொண்டுள்ளது.