பள்ளி அருகே எதிர்திசையில் சென்ற Grab டாக்சி..! வைரலான Dashcam வீடியோ!

பள்ளி அருகே எதிர்திசையில் சென்ற Grab டாக்சி..! வைரலான Dashcam வீடியோ!

சிங்கப்பூர்: யிஷூன் மேல்நிலைப் பள்ளிக்கு அருகில் ஆபத்தான முறையில் எதிர் திசைப்பாதையில் காரை ஓட்டி சென்ற கிராப்ட் டாக்சி ஓட்டுநரின் கணக்கை தற்காலிகமாக முடக்கியுள்ளதாக கிராப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

‘SG Road Vigilante – SGRV’ என்ற முகநூல் பக்கத்தில் ஆகஸ்ட் 11ஆம் தேதி அன்று பதிவிடப்பட்ட டேஷ்கேம் காணொளி மூலம் இந்த சம்பவமானது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7) மதியம் 2:10 மணி அளவில் இந்த விதிமீறல் நிகழ்ந்துள்ளது. யிஷூன் தெரு 71-ல் உள்ள யிஷூன் மேல்நிலைப் பள்ளிக்கு அருகில் உள்ள ஒற்றை வழிச் சாலையில் இது நடந்துள்ளது.

பள்ளிக்கு வெளியே வாகன நெரிசல் இருந்த போது ஒரு வெள்ளை நிற டொயோட்டோ ப்ரியாஸ் (Toyota Prius) கார் தனக்கு முன்னால் இருந்த வாகனங்களை முந்திச் செல்ல முயன்றுள்ளது. அதற்காக அந்த ஓட்டுநர் தனது காரை சட்ட விரோதமாக எதிர்திசை பாதைக்கு மாற்றி வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார்.

அந்த சாலையின் மையப்பகுதியில் தடுப்புகள் இல்லாததைப் பயன்படுத்தி அவர் இவ்வாறு செய்து உள்ளார். ஓட்டுநரின் இந்த செயல் பள்ளி பகுதி என்பதால் மாணவர்களின் பாதுகாப்புக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக அமைந்தது.

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் சம்பந்தப்பட்ட ஓட்டுநரின் கணக்கை உடனடியாக தற்காலிகமாக முடக்கியுள்ளதாக கிராப் நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது. மேலும் தங்களது ஓட்டுநர்களின் பாதுகாப்பு மற்றும் ஒழுக்கம் மிக முக்கியம் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இத்தகைய பொறுப்பற்ற ஓட்டுமுறை குறித்து சிங்கப்பூர் போக்குவரத்து காவல்துறை தங்களது விசாரணைகளைத் தொடர்ந்து நடத்தி வருகின்றது.

சிங்கப்பூர் சாலை சட்டங்களின்படி, பள்ளி பகுதியில் இவ்வாறு ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடுமையான அபராதமும், ஓட்டுநர் உரிமப் புள்ளிகள் (Demerit Points) பறிமுதல் போன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.