சிங்கப்பூரில் போதைப் பொருள் கடத்தல்..!! வெளிநாட்டு இளைஞர் கைது..!!

சிங்கப்பூரில் போதைப் பொருள் கடத்தல்..!! வெளிநாட்டு இளைஞர் கைது..!!

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் சந்தேகத்தின் பேரில் 25 வயதுடைய வெளிநாட்டு நபர் ஒருவர், மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்ட அமலாக்க அதிகாரிகள் மெத்தம் பெட்டமைன் மற்றும் எக்ஸ்டஸி உள்ளிட்ட $81,000 க்கும் அதிக மதிப்புள்ள போதைப் பொருட்களையும், சுமார் $1,200 ரொக்க பணத்தையும் கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து பறிமுதல் செய்துள்ளனர்.

போதைப்பொருள் தடுப்புப் பிரிவு இச்சம்பவம் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஜூலை 7 ஆம் தேதி அதிகாலை ஜாலன் கிம் கீ சாலையில் அந்த வெளிநாட்டு இளைஞரை ஏற்றிச் சென்ற வாகனத்தை சட்ட அமலாக்க அதிகாரிகள் வழிமறித்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து வாகனத்தின் பின் இருக்கையின்தரையில் சுமார் 3,129 கிராம் கஞ்சாவை அதிகாரிகள் கண்டெடுத்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

பின்னர் சட்ட அமலாக்க அதிகாரிகள் அந்த நபரை கெய்லாங் கிழக்கில் உள்ள அவரது அடுக்குமாடிக் குடியிருப்பதற்கு அழைத்துச் சென்று, சுமார் 200 கிராம் கஞ்சா, 121 கிராம் மெத்தம்பெட்டமைன் மற்றும் 55 கிராம் எக்ஸ்டஸி ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக அமலாக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


1973 ஆம் ஆண்டு போதைப்பொருள் தவறாகப் பயன்படுத்துதல் சட்டத்தின் 5ஆம் பிரிவின் கீழ், போதைப் பொருள் கடத்தல், கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருட்களின் கடத்தலல் இடைத்தரகராகச் செயல்படுதல் அல்லது போதைப் பொருட்களின் கடத்தலுக்காக ஏதேனும் தயாரிப்பு பணிகளைச் செய்தல் ஆகியவை கடுமையான குற்றங்களாக கருதப்படுகின்றன.

மேலும் 500 கிராமுக்கு மேல் கஞ்சாவை கடத்துவது என்பது மரண தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதை பொது மக்களுக்கு அதிகாரிகள் நினைவூட்டி உள்ளனர்.