சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பயணிகள் இனி நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை விரைவில் குறைய வாய்ப்பு உள்ளது. ரயில் நம்பகத்தன்மையை மேம்படுத்தும் நோக்கில் அரசு, நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA), SMRT மற்றும் SBS டிரான்சிட் ஆகியவை இணைந்து ரயில் நம்பகத்தன்மை பணிக்குழு ஒன்றை அமைத்துள்ளன.
இந்த குழு ரயில் சேவை தாமதங்கள் மற்றும் தொழில்நுட்ப கோளாறுகளை மதிப்பாய்வு செய்து, பராமரிப்பு முறைகளை வலுப்படுத்தும். குறிப்பாக வடகிழக்கு பாதையின் மின் அமைப்பை மாற்றுதல், வட்டப் பாதை மற்றும் வடகிழக்கு பாதையின் சமிக்ஞை அமைப்புகளை வலுப்படுத்துதல் போன்றவை முக்கிய இலக்குகளாக உள்ளன.
மேலும், பராமரிப்பு நடைமுறைகள், தொழில்நுட்ப தணிக்கை, பணியாளர் பயிற்சி ஆகியவற்றிலும் முழுமையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. சம்பவங்கள் நேரிட்டால், பயணிகளின் பாதுகாப்பை பாதிக்காமல் சேவையை விரைவில் மீட்டெடுப்பதற்கான புதிய முறைகள் அமல்படுத்தப்படும்.
அரசாங்கம் அடுத்த 5 ஆண்டுகளில் கூடுதலாக 1 பில்லியன் முதலீடு செய்ய இருப்பதாகவும், இதன் மூலம் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, ஊழியர்களின் திறன்கள் மேம்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது பயணிகளுக்கு சிரமமில்லா, விரைவான மற்றும் நம்பகமான ரயில் சேவை கிடைக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.