இனி வேகமாக வாகனம் ஓட்டினால் கடும் அபராதம் – ஜனவரி முதல் புதிய நடைமுறை

இனி வேகமாக வாகனம் ஓட்டினால் கடும் அபராதம் – ஜனவரி முதல் புதிய நடைமுறை

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் வேகமாக வாகனம் ஓட்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல், வேக மீறல்களில் ஈடுபடும் ஓட்டுநர்களின் உரிமங்களில் இருந்து அதிக குறைபாடு புள்ளிகள் கழிக்கப்படுவதுடன், அபராதங்களும் உயர்த்தப்படவுள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு மே 28 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட இந்த புதிய அபராத மாற்றங்கள், 2026 ஜனவரியில் அமலுக்கு வரும். புதிய விதிகளின்படி, மணிக்கு 20 கிலோமீட்டர் அல்லது அதற்கும் குறைவாக வேகத்தை மீறி வாகனம் ஓட்டினால், குறைபாடு புள்ளிகள் 4ல் இருந்து 6 ஆக உயர்த்தப்படும். அதேபோல், 50 முதல் 60 கிலோமீட்டர் வரை வேகமாக ஓட்டினால், குறைபாடு புள்ளிகள் 18ல் இருந்து 24 ஆக அதிகரிக்கப்படும். இத்தகைய கடுமையான மீறல்களில் ஈடுபடுவோர் நீதிமன்றத்திற்கு ஆஜர்படுத்தப்படுவார்கள்.

மேலும், வழக்குகளை முடிப்பதற்கான அபராதத் தொகையும் உயர்த்தப்பட உள்ளது. குறைந்த அளவிலான மீறல்களுக்கு விதிக்கப்படும் அபராதம் S$50 வெள்ளியில் இருந்து S$100 வெள்ளியாக உயர்த்தப்படுவதுடன், அதிகபட்ச அபராதம் S$500 வெள்ளி வரை விதிக்கப்படலாம் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் சாலை விபத்துகளுக்கு வேகமே ஒரு முக்கிய காரணம் என உள்துறை அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த ஆண்டின் முதல் பாதியில் மட்டும், சுமார் 1.2 லட்சம் வேக மீறல் சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 45 சதவீதம் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு கூடுதலாக, அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல், நட்பு வீதிகள் எனப்படும் குடியிருப்பு பகுதிகளில் போக்குவரத்து விதிகளை மீறும் ஓட்டுநர்களுக்கு மேலும் கடும் தண்டனைகள் விதிக்கப்படும். வேகமாக வாகனம் ஓட்டுதல், சிவப்பு விளக்கை மீறுதல், பாதசாரிகளுக்கு வழி விடாதது போன்ற குற்றங்களுக்கு கூடுதல் அபராதங்களும், மேலதிகமாக 2 குறைபாடு புள்ளிகளும் விதிக்கப்படும். மேலும், இவ்வகை வழக்குகளை முடிப்பதற்கான அபராதம் கூடுதலாக S$100 உயர்த்தப்படும்.

இந்த புதிய நடவடிக்கைகள் மூலம் சாலை பாதுகாப்பை உறுதி செய்யவும், விபத்துகளை குறைக்கவும் அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK