இந்தோனேசியாவில் இந்து மத வழிபாடு..!! இதன் பின்னால் இருக்கும் சுவாரஸ்ய வரலாறு என்ன..??
மக்கள் தொகை அடிப்படையில் உலகிலேயே பெரிய இஸ்லாமிய நாடு, இந்தோனேசியா. இந்த நாட்டின் ஒரு பகுதியில், இந்து மதம் பிரதானமாக பின்பற்றப்படுகிறது. அந்தப் பகுதி, பாலி.
இந்த தீவுக்கூட்டங்களில் வாழும் மக்களில் 93 சதவீதம் பேர் இந்து மதத்தைப் பின்பற்றுகின்றனர். இங்கு அதிகமாக விளைவிக்கப்படுவது நெல். பாலி மக்கள் ஒவ்வொரு முறை பயிர் செய்வதற்கு முன்பாகவும், இறைவனை வழிபடும் வழக்கத்தைப் பின்பற்றுகிறார்கள்.
அனைவரது வயல்களிலும் ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய தெய்வங்களுக்கு தனியாக சிறிய இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அந்த இரு தெய்வங்களையும் வழிபட்ட பிறகுதான், விவசாயப் பணியைத் தொடங்குகிறார்கள்.
பாலியில் உள்ள இந்து சமய கலாசாரம், வேதங்களில் கூறப்பட்டுள்ள ரிஷிகளிடம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. புராணங்களில் வரும் மார்க்கண்டேயர், அகஸ்தியர், பரத்வாஜர் போன்ற ரிஷிகளைப் பற்றி நம்மூர் பெரியவர்கள் பலருக்கே தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஆனால் பாலி பள்ளிகளில், இந்த ரிஷிகளைப் பற்றிய பாடங்கள் இருக்கின்றனவாம். அனைத்து பள்ளிகளிலும் 3 வேளை காயத்ரி மந்திரம் சொல்லப்படுகிறது. அதோடு சூரிய நமஸ்காரத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மூன்று வேளையும் சூரிய நமஸ்காரம் செய்யும் நேரத்தைக் குறிப்பிடும் வகையில் பள்ளியில் ஒலி எழுப்பப்படுகிறது.
பாலியில் உள்ள இந்து கோவில் களுக்குள் நுழைய வேண்டும் என்றால், ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் வேட்டி, சட்டை அணிந்திருக்க வேண்டும். அந்த தீவின் தேசியடையே வேட்டிதான். பாலி தீவு மக்கள் பூஜை செய்யும்போது, மந்திரங்கள், துதிகளை படிக்க புத்தகங்கள் வைத்திருப்பதில்லை.
அவர்கள் ഇപ്പോഴും ஓலைச்சுவடியைத்தான் பயன்படுத்துகிறார்கள். பெரும் திருவிழா காலங்களில், இந்த ஓலைச்சுவடிகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லும் வழக்கமும் இருக்கிறது.
இந்தோனேசியாவில் மிக முக்கிய நிகழ்வாக இருப்பது, ‘நைய்பி டே’ (Nyepi day). இதை ‘அமைதி, உண்ணாவிரதம், தியானம் ஆகியவற்றின் நாள்’ என்கிறார்கள். ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் வரும் குறிப்பிட்ட ஒரு நாளில், இந்த விரதத்தை பாலி மக்கள் மேற்கொள்கிறார்கள்.
பாலி இன மக்களின் மன, மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், இந்த நாள் முழுவதும் இந்தோனேசியாவில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அன்றைய தினம் நாடு முழுவதும் விடுமுறைதான்.
அந்நாளில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை எந்தப் போக்குவரத்தும் இருக்காது. பாலியில் உள்ள ஒரே ஒரு விமான நிலையமும் நாள் முழுவதும் மூடப்பட்டிருக்கும். பொழுதுபோக்கு, மகிழ்ச்சி கிடையாது. வீட்டில் இருப்பவர்களும் கூட தொலைக்காட்சி, ஒலிபெருக்கியை சத்தமாக வைத்துக் கேட்கக்கூடாது. ஒலி குறைவாக, வீட்டில் இருப்பவர்களுக்கு மட்டுமே கேட்கும்படியாக இருக்க வேண்டும்.
இது இந்துக்களுக்கான பண்டிகை என்றாலும், பிற மதத்தவர்களுக்கும் இந்தக் கட்டுப்பாடு பொருந்தும். இவ்வளவு ஏன், சுற்றுலாவாக அங்கு சென்றவர்கள் கூட, ஓட்டல்களுக்குள் விரும்பியபடி இருக்கலாமே தவிர, கடற்கரை மற்றும் தெருக்களில் நடமாட அனுமதி கிடையாது. பிரசவிக்க இருக்கும் பெண்கள், உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு மட்டுமே கட்டுப்பாட்டுத் தளர்வு உண்டு.
இந்த நாளுக்கு மறுநாள் பாலி இன மக்கள், புத்தாண்டைக் கொண்டாடுகிறார்கள். இந்த நாளில் சில சடங்குகளை அவர்கள் செய்கிறார்கள். கடற்கரையில் இந்த சடங்குகள் செய்யப்படுகின்றன. அனைத்து பகுதிகளிலும் உள்ள ஆலயங்களின் புனித பொருட்களைத் தூய்மைப்படுத்தவும், கடலில் இருந்து புனிதநீரைப் பெறவும், தீயசக்திகளை அழிக்கவும், மனிதகுலம் மற்றும் இயற்கையுடன் சமநிலையை உருவாக்கவும் இதைச் செய்கிறார்கள்.
இந்த சடங்கில் விலங்குகளை பலியிடும் பழக்கமும் இருக்கிறது. அப்போது பாலி மக்கள், எதிர்மறையான சக்திகள், புராணங்களில் வரும் அசுரர்களைக் குறிக்கும் வகையில், மூங்கில், துணி போன்ற பொருட்களால் உருவாக்கப்பட்ட உருவங்களை செய்து, ஊர்வலமாக எடுத்துச் சென்று எரிக்கும் வழக்கத்தைப் பின்பற்றுகின்றனர். பாலித் தீவு இந்து கலாசாரம், இனம், மதத்தைத் தாண்டி எல்லோரையும் வசீகரிப்பதாக இருக்கிறது.