சிங்கப்பூர் எல்லையில் சிக்கிய சட்டவிரோத கடல் பயணம்..!!

சிங்கப்பூர் எல்லையில் சிக்கிய சட்டவிரோத கடல் பயணம்..!!

சிங்கப்பூர்: காவல்துறையினரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற போது சாம்பன் படகு கவிழ்ந்து, சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற ஆறு இந்தோனேசிய ஆண்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில், நேற்று (26.01.26) ஆறு பேருக்கும் ஒரு வருடம் முதல் ஒன்பது மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், நான்கு முதல் பத்து பிரம்படிகளும் வழங்கப்பட்டன.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் 23 வயதான அஸ்ராருதீன், 28 வயதான பிரிக், 25 வயதான ஹார்டி, 27 வயதான இஸ்மாவுன், 24 வயதான எம் அம்ரின் மற்றும் 29 வயதான முஅமர் இமான் ஆகியோர் ஆவர்.

கடந்த நவம்பரில் சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைய திட்டமிட்ட அவர்கள், பணத்தைச் சேர்த்து 15 மில்லியன் இந்தோனேசிய ரூபியாவிற்கு (சுமார் S$1,100) ஒரு சாம்பன் படகை பேஸ்புக் விற்பனையாளரிடமிருந்து வாங்கியதாக விசாரணையில் தெரியவந்தது.

டிசம்பர் 20 அன்று, இந்தோனேசியாவின் பாத்தாமில் உள்ள சேகுபாங்க் கடற்கரையிலிருந்து அவர்கள் பயணத்தைத் தொடங்கினர்.படகை இயக்கிய அஸ்ராருதீனுக்கு இது முதல் கடல் பயணம் என்பதாலும், கடல் நிலைமை மோசமாக இருந்ததாலும், அவர்கள் பல மணி நேரம் கடலில் சிக்கியிருந்தனர்.

டிசம்பர் 21 நள்ளிரவு சுமார் 12.40 மணியளவில், மலேசியாவின் தனா மேரா அருகே கடலில் சுமார் 10 மீட்டர் நீளமுள்ள மரச் சாம்பன் ஒன்றை காவல்துறையினர் கண்டறிந்தனர்.


இதையடுத்து போலீசார் கடலில் துரத்திச் சென்றனர். காவல்துறையிடமிருந்து தப்பிக்க முயன்றபோது, கடல் நீர் படகிற்குள் புகுந்து சாம்பன் மூழ்கத் தொடங்கியது.

பின்னர் ஆறு பேரும் போலீசாரால் மீட்கப்பட்டனர்.ஆனால் சாம்பன் முழுமையாக மூழ்கியது.விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேரும் 2022 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் சிங்கப்பூரிலிருந்து இந்தோனேசியாவுக்கு நாடு கடத்தப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதில் பிரிக் என்பவர் ஏற்கனவே ஐந்து முறை சட்டவிரோதமாக சிங்கப்பூருக்குள் நுழைந்திருந்ததால், அவருக்கு அதிகபட்சமாக ஒரு வருடம் ஒன்பது மாதங்கள் சிறைத்தண்டனையும் பத்து பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.

சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைவோருக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை, குறைந்தது மூன்று பிரம்படிகள் அல்லது S$6,000 வரை அபராதம் விதிக்கப்படும். நாடு கடத்தப்பட்ட பிறகு மீண்டும் சட்டவிரோதமாக நுழைவோருக்கு ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் S$6,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK