ஜூரோங் வெஸ்டில் விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பித்த நபர் கைது...!!
சிங்கப்பூர்: ஜூரோங் வெஸ்டில் நேற்று (23.01.26) நடந்த பயங்கரமான சாலை விபத்தில், ஒரு பெண் பாதசாரி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 44 வயதுடைய ஆண் கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் இன்று (24.01.26) பிற்பகல் உறுதிப்படுத்தினர்.
இந்த விபத்தில் கார் மோதி கோமா நிலைக்கு சென்ற 36 வயதுடைய பெண் பாதசாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காத நிலையில், அவர் இன்று(24.01.26) காலை உயிரிழந்தார்.
முந்தைய தகவல்களின்படி, ஜூரோங் வெஸ்டில் சாலையைக் கடக்கும் போது பெண்ணை ஒரு கார் மோதியதை காட்டும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடக தளமான சியாவோங்ஷுவில் நெட்டிசன்களால் பகிரப்பட்டன.
அந்த பதிவுகளில், பாதிக்கப்பட்ட பெண் சாலையின் நடுவில் உள்ள இடைநிலைப் பகுதியில் படுத்துக் கொண்டிருப்பதும், சம்பந்தப்பட்ட கார் சிறிது நேரம் நின்றுவிட்டு பின்னர் அங்கிருந்து சென்றுவிட்டதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
போலீசார் வெளியிட்ட தகவலின்படி, ஜூரோங் வெஸ்ட் அவென்யூ 4 இலிருந்து ஜூரோங் வெஸ்ட் அவென்யூ 2 நோக்கிச் செல்லும் சாலையில் நேற்று(23.01.26) காலை 7:25 மணியளவில் இந்த பாதசாரி சம்பந்தப்பட்ட விபத்து நடந்ததாக அறிவிப்பு கிடைத்தது.