எச்சரிக்கை..!! சிங்கப்பூரில் அதிகரிக்கும் தட்டம்மை வழக்கு..!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் தட்டம்மை வழக்குகள் அதிகரித்து வருகின்றன. ஜனவரி மாதத்தில் மட்டும் 11 தட்டம்மை நோயாளிகள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது கடந்த ஆண்டின் இதே காலத்தை ஒப்பிடும்போது ஐந்து மடங்கு அதிகமாகும்.இதனால் பொதுமக்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தட்டம்மை என்பது மிகவும் தொற்றுத் தன்மை கொண்ட வைரஸ் நோயாகும்.இருமல்,தும்மல் மூலம் காற்றில் பரவும் இந்த வைரஸ்,இரண்டு மணி நேரம் வரை சுற்றுப்புறத்தில் செயல்பாட்டில் இருக்கும்.காய்ச்சல்,இருமல், மூக்கொழுகல்,கண்களில் சிவப்பு மற்றும் நீர் வடிதல் ஆகியவை ஆரம்ப அறிகுறிகளாகும். சில நாட்களில் முகம் முதல் உடல் முழுவதும் தடிப்புகள் பரவக்கூடும்.
கடுமையான சந்தர்ப்பங்களில் தட்டம்மை நிமோனியா, மூளையழற்சி போன்ற ஆபத்தான சிக்கல்களை ஏற்படுத்தி உயிரிழப்புக்கும் காரணமாகலாம். குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர்.
தட்டம்மை நோயைத் தடுப்பதற்கான மிகச் சிறந்த வழி MMR தடுப்பூசி ஆகும். இரண்டு டோஸ் தடுப்பூசி போடுவதன் மூலம் சுமார் 97 சதவீத பாதுகாப்பு கிடைக்கும் என சுகாதார அமைப்புகள் தெரிவிக்கின்றன. தடுப்பூசி நிலை குறித்து சந்தேகம் இருந்தால், மருத்துவரை அணுகி இரத்தப் பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
உலகளாவிய அளவில் தட்டம்மை மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், பயணிக்கும் போது கூடுதல் கவனம் அவசியம்.தடுப்பூசி போடுதல்,முகமூடி அணிதல்,கை சுத்தத்தை பேணுதல் போன்ற நடவடிக்கைகள் தொற்று அபாயத்தை குறைக்கும். சிங்கப்பூரில் தடுப்பூசி விகிதம் உயர்ந்திருந்தாலும், தடுப்பூசி போடாதவர்களிடையே சிறிய அளவிலான பரவல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.