டெவலப்பர்களுக்கு புதிய வாய்ப்புகள்..!!!அரசு விரிவாக்கத் திட்டம் அறிவிப்பு..!!
சிங்கப்பூர்:சிங்கப்பூர் அரசு அடுத்த ஆண்டு முதல் பாதிக்கான நில விற்பனைத் திட்டத்தை அறிவித்துள்ளது.இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்பது தளங்களும், விற்பனைக்குக் கிடைக்கும் 12 தளங்களும் அடங்கும். இத்தளங்கள் மூலம் மொத்தம் 9,185 தனியார் குடியிருப்பு அலகுகள், 209,150 சதுர மீட்டர் வணிக இடங்கள் மற்றும் 970 ஹோட்டல் அறைகள் உருவாக்கப்பட உள்ளன.
தேசிய மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி,குறுகிய பட்டியலில் எட்டு தனியார் குடியிருப்பு தளங்கள் மற்றும் ஒரு கலப்பு பயன்பாட்டு தளம் அடங்கும். இதன் மூலம் 635 நிர்வாக காண்டோமினியம் (EC) அலகுகள் உட்பட 4,575 தனியார் குடியிருப்பு யூனிட்டுகள் கட்டப்படும்.
அதேபோல், விற்பனைக்குக் கிடைக்கும் 12 தளங்களில் ஆறு தனியார் குடியிருப்பு தளங்கள், ஒரு வணிக தளம், மூன்று “வெள்ளை தளங்கள்” (mixed-use zoning) மற்றும் இரண்டு ஹோட்டல் தளங்கள் போன்றவை அடங்கும். இவை சேர்த்து மேலும் 4,610 தனியார் குடியிருப்பு அலகுகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சகம் தெரிவித்ததாவது,இந்த ஆண்டின் முதல் பத்து மாதங்களில் தனியார் குடியிருப்பு சொத்து பரிவர்த்தனைகள் வலுவாக இருந்தன.மேலும் சொத்து சந்தையின் நிலைத்தன்மையையும் சமநிலையையும் பேணுவதற்காக அரசு விநியோகத்தைத் தொடர்ந்து அதிகப்படுத்த முடிவு செய்துள்ளது.
அதன் விளைவாக,அடுத்த ஆண்டின் முதல் பாதியில் வழங்கப்படும் புதிய நிலங்களுடன் சேர்த்து,சந்தையில் உள்ள தனியார் குடியிருப்பு அலகுகளின் மொத்த சாத்தியமான விநியோகம் தற்போதைய 54,100 யூனிட்டுகளிலிருந்து சுமார் 58,600 யூனிட்டுகளாக உயரும் என அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
அதிகாரிகள் கூறியதாவது, இந்த விரிவாக்கத் திட்டம் டெவலப்பர்களுக்கு கூடுதல் நிலமிடங்களைப் பெற்று மேம்படுத்தும் வாய்ப்பை அளிக்கும், மேலும் குடியிருப்பு சந்தையில் சீரான வளர்ச்சியையும் விலைக் கட்டுப்பாட்டையும் உறுதி செய்யும் நோக்கத்துடன் அமல்படுத்தப்படுகிறது.