தனியார் வாகன ஓட்டுநர்களுக்கு நிம்மதி தரும் புதிய அப்டேட்..!!
அமைப்புகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க, உள்ளூர் பிளாட்ஃபார்ம் நிறுவனங்கள் நான்கு முக்கிய நடவடிக்கைகளை படிப்படியாக அமல்படுத்த உள்ளன.
சவாரியை ஏற்றுக்கொள்வதற்கு முன்பும், ஏற்றுக்கொண்ட பிறகும், ஓட்டுநர்கள் கட்டண விவரங்களை தெளிவாக அறிந்து முடிவெடுக்க உதவுவதே இந்த நடவடிக்கைகளின் நோக்கம் என தேசிய தனியார் டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கம் (NPHVA) தெரிவித்துள்ளது.
கிலோமீட்டருக்கான நிகர கட்டணம் காண்பிக்கப்படும். மேலும், ஆர்டரை ஏற்றுக்கொண்ட பிறகு பயணத்தின் மொத்த கட்டணமும் ஓட்டுநர்களுக்கு காட்டப்படும்.
பயணம் முடிந்த பின், விரிவான மற்றும் தெளிவான கட்டண விவரங்கள் வழங்கப்படுவதுடன், வாராந்திர அல்லது மாதாந்திர பில்களில் ஓட்டுநர்களின் மொத்த ஆன்லைன் நேரமும் பட்டியலிடப்படும்.
இதற்கிடையில், பிளாட்ஃபார்ம் சேவை கட்டணங்கள் மற்றும் கமிஷன் சதவீதங்களை மேலும் தெளிவாக காட்ட வேண்டும் என சங்கம் வலியுறுத்தியுள்ளது. இருப்பினும், இந்த கமிஷன் தொடர்பான முன்மொழிவுகள் இன்னும் பிளாட்ஃபார்ம் நிறுவனங்களின் பரிசீலனையில் உள்ளன.
கட்டண விவரங்களில் தெளிவு இல்லாதது ஓட்டுநர்களுக்கு சவாரிகளின் மதிப்பை சரியாக கணக்கிட முடியாத நிலையை ஏற்படுத்துகிறது என சங்கம் சுட்டிக்காட்டியது. வெளிப்படைத்தன்மை அதிகரிப்பதால், ஓட்டுநர்களின் நம்பிக்கை, வருமான நிலைத்தன்மை மற்றும் வாழ்வாதாரம் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.