சிங்கப்பூரில் சட்டவிரோத மதுபான விற்பனைக்கு நோ சான்ஸ்..!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் வரி ஏய்ப்பு செய்யப்பட்ட மதுபானங்களை விற்க முயன்றதாக 52 வயதுடைய சீனாவைச் சேர்ந்த நபருக்கு S$ 200,700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை கடந்த ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டதாக சிங்கப்பூர் சுங்கத் துறை இன்று (08.01.26) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அந்த நாளில், துவாஸ் வியூ சதுக்கத்தில் உள்ள ஒரு தொழில்துறை கட்டிடத்திற்குள் பொருட்களை எடுக்க நுழைந்த ஹுவாங் ஹாங்ஜியாங் என்பவரை சட்ட அமலாக்க அதிகாரிகள் கவனித்தனர். அவரை சோதனை செய்ததில், வரி செலுத்தப்படாத நிலையில் கடத்தி வரப்பட்ட 186 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், ஹுவாங் ஹாங்ஜியாங் தனது சீன நண்பருடன் இணைந்து சிங்கப்பூரில் சீன மதுபானங்களை விற்பனை செய்ய சதி செய்தது தெரியவந்தது. அவரது கூட்டாளி சீனாவில் இருந்து மதுபானங்களை வாங்கி, சுங்க வரி மற்றும் பொருட்கள் மற்றும் சேவை வரியைத் தவிர்த்து சிங்கப்பூருக்கு இறக்குமதி செய்ய ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது.
சிங்கப்பூரில் அந்த மதுபானங்களை டெலிவரி செய்வதற்கான பொறுப்பை ஹுவாங் ஹாங்ஜியாங் ஏற்றுள்ளார். அவர் அந்த பொருட்களை எடுத்துச் செல்லும் போது தான் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
இந்த வழக்கில், கடந்த ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி ஹுவாங் ஹாங்ஜியாங் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு, சுங்கச் சட்டத்தை மீறியதற்கான குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவர் மீது பதிவு செய்யப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகள் மூலம், சுங்க வரி மற்றும் பொருட்கள் மற்றும் சேவை வரி ஆகியவற்றில் சுமார் S$25,499 தொகையை வரி ஏய்ப்பு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றம் அவருக்கு S$200,700 அபராதம் விதித்தது. அபராதத்தை செலுத்தத் தவறினால், அவருக்கு இரண்டு மாதங்கள் மற்றும் ஒரு வாரம் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
சுங்கச் சட்டம் மற்றும் கலால் வரிச் சட்டத்தின் கீழ், வரி ஏய்ப்பு செய்யப்பட்ட மதுபானங்களை வாங்குவது, விற்பது, கொண்டு செல்வது, வழங்குவது, சேமிப்பது அல்லது வைத்திருப்பது கடுமையான குற்றமாகும்.
இத்தகைய குற்றங்களுக்கு,ஏய்ப்பு செய்யப்பட்ட வரி தொகையை விட 20 மடங்கு வரை அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என சுங்கத் துறை தெரிவித்துள்ளது.