இனி அரிய நீரிழிவு நோயாளிகளுக்கும் CGM சாதன சலுகை..!!!

சிங்கப்பூர்: நீரிழிவு நோயைக் கண்காணிக்க பயன்படுத்தப்படும் தொடர் ரத்த சர்க்கரை கண்காணிப்பு (CGM) சாதனத்திற்கு வழங்கப்படும் அரசாங்க நிதி உதவி, இனி அரிய வகை நீரிழிவு நோயாளிகளுக்கும் கிடைக்கிறது. இந்தத் திட்டம் டிசம்பர் 1 முதல் அமலுக்கு வந்துள்ளதாக சுகாதார அமைச்சின் பராமரிப்பு ஆற்றல் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதன்படி, CGM சாதனத்தைப் பெற 30 முதல் 80 விழுக்காடு வரை நிதி உதவி வழங்கப்படுகிறது. இதுவரை சில வகை நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த இந்தச் சலுகை,தற்போது மேலும் இரண்டு அரிய வகை நீரிழிவு நோயாளிகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களில் சிகிச்சை பெறும் தகுதியுள்ள சிங்கப்பூரர்கள் இந்த உதவியைப் பெற முடியும்.CGM என்பது உடலில் ஒட்டிக் கொள்ளக்கூடிய ஒரு நவீன தொழில்நுட்பச் சாதனமாகும். இது ரத்த சர்க்கரை அளவை தொடர்ந்து கண்காணித்து, அதன் விவரங்களை கைப்பேசி அல்லது தனிப்பட்ட வாசிப்பு சாதனத்தின் மூலம் காட்டுகிறது. இதனால் அடிக்கடி விரலில் ஊசி குத்தி பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் குறைகிறது.
இந்த சாதனத்தின் மூலம் ரத்த சர்க்கரை அளவின் மாற்றங்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள முடிவதால், இன்சுலின் மருந்தின் அளவை நோயாளிகள் எளிதாகச் சரிசெய்து கொள்ள முடியும். மேலும், சர்க்கரை அளவு அளவுக்கு அதிகமாக உயர்வதையும், ஆபத்தான அளவுக்கு குறைவதையும் முன்கூட்டியே கண்டறிந்து தவிர்க்க முடியும் என ‘நோவி ஹெல்த்’ நிறுவனத்தின் மூத்த மருத்துவ ஆலோசகர் டாக்டர் சூ-ஆன் தோ தெரிவித்தார்.
சுகாதார அமைச்சின் அண்மையத் தரவுகளின்படி, சிங்கப்பூரில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட நீரிழிவு நோயாளிகள் உள்ளனர். தற்போது நிதி உதவியில் சேர்க்கப்பட்டுள்ள புதிய நோயாளி வகைகளில் கணைய நீரிழிவு நோயாளிகளும் அடங்குவர். கணையம் சேதமடைந்ததால் உடலில் தேவையான இன்சுலின் சுரக்க முடியாத நிலை உள்ளவர்கள் இதில் சேர்க்கப்படுகின்றனர். கணையம் நீக்கப்பட்ட புற்றுநோயாளிகளும் இந்தப் பிரிவில் உள்ளனர்.
மேலும், மோனோஜெனிக் நீரிழிவு நோயாளிகளும் இந்த நிதி உதவிக்குத் தகுதி பெறுகின்றனர். இருப்பினும், இத்தகைய அரிய வகை நோயாளிகளின் எண்ணிக்கை, சிங்கப்பூரின் மொத்த நீரிழிவு நோயாளிகளில் மிகவும் குறைவாகவே இருப்பதாக மருந்தக நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Follow us on : click here
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
