ஒரே அறிவிப்பால் கலங்கிய பெற்றோர்கள்..!! காரணம்..??
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் எட்டு தொடக்கப் பள்ளிகளில் மாணவர் பராமரிப்பு மையங்களை நடத்தி வந்த லிட்டில் ப்ரொஃபசர்ஸ் கற்றல் மையம் கடந்த சனிக்கிழமை (14.02.26) முதல் திடீரென மூடப்பட்டுள்ளது. தொடர்ந்து ஐந்து நாட்களாக சேவை நிறுத்தப்பட்டுள்ளதால்,பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பள்ளிக்குப் பிந்தைய பராமரிப்பு ஏற்பாடுகள் குறித்து கவலை கொண்டுள்ளனர்.
இதனால் பாதிப்படைந்த பெற்றோர்கள் தற்போதைக்கு கல்வி அமைச்சகம் அறிவித்துள்ள தற்காலிக ஏற்பாடுகளையே நம்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
சிங்கப்பூர் கல்வி அமைச்சகம் அறிமுகப்படுத்திய தற்காலிக நடவடிக்கைகளில், மாணவர்களுக்கு உணவு வழங்குதல் மற்றும் பள்ளிக்குப் பிந்தைய பயிற்சி அளித்தல் ஆகியவை அடங்கும். இந்த ஏற்பாடுகளுக்காக பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் எந்தக் கட்டணமும் செலுத்த தேவையில்லை என கூறப்பட்டுள்ளது.
பேவியூ தொடக்கப் பள்ளியில் படிக்கும் மாணவரின் தாயார் ஒருவர், “இந்த தற்காலிக ஏற்பாடுகளை நம்புவதைத் தவிர வேறு வழியில்லை” என்று கூறினார். ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பள்ளி பணியாளர்களின் முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்தாலும், உடனடியாக மாற்று ஏற்பாடுகளை யோசிக்க முடியாத நிலை இருப்பதாக அவர் கூறினார்.
ஏழு பேர் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த அந்தத் தாய், புதிய மாணவர் பராமரிப்பு மையம் கிடைக்கவில்லை என்றால் தன் விற்பனை உதவியாளர் பணியை விட்டு விட வேண்டிய சூழல் உருவாகலாம் என்றும், அது குடும்பத்தின் பொருளாதார நிலையை கடுமையாக பாதிக்கும் என்றும் கவலை தெரிவித்தார். இதே போன்ற கவலைகளை மற்ற பெற்றோர்களும் வெளிப்படுத்தினர்.
பாதிக்கப்பட்ட பள்ளிகளில் ஆங்கர் கிரீன் தொடக்கப் பள்ளி, கிராஞ்சி தொடக்கப் பள்ளி, ஹாங் வென் பள்ளி, ஜிங் ஷான் தொடக்கப் பள்ளி, புங்கோல் கோவ் தொடக்கப் பள்ளி, வாட்டர்வே தொடக்கப் பள்ளி, வெஸ்ட்வுட் தொடக்கப் பள்ளி மற்றும் வைட் சாண்ட்ஸ் தொடக்கப் பள்ளி ஆகியவை அடங்கும்.