சிங்கப்பூரில் மின் வாகனங்களை விற்பனை செய்வது சிரமமா..?? காரணம்..??
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் மின்வாகனங்களின் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த அக்டோபர் மாத புள்ளிவிவரங்களின்படி, புதிய கார்கள் விற்பனையில் மின்வாகனங்கள் 53 விழுக்காடு இடம்பிடித்துள்ளன.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, எரிபொருள் செலவு குறைவு போன்ற காரணங்களால் மக்கள் மின்வாகனங்களை விரும்பி வாங்கி வருகின்றனர்.இருப்பினும், ஒருமுறை பயன்படுத்தப்பட்ட மின்வாகனங்களை மறுவிற்பனை செய்வது கடினமாக இருப்பதாக வாகன மறுவிற்பனை நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
வழக்கமான பெட்ரோல் வாகனங்களை மூன்று வாரங்களுக்குள் மறுவிற்பனை செய்ய முடியும் என்றாலும், மின்வாகனங்களை விற்க ஆறு மாதங்கள் அல்லது அதற்கும் மேலாக ஆகும் நிலை உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அங் மோ கியோவில் உள்ள ‘இயுரோ பெர்ஃபார்மன்ஸ் ஏசியா’ நிறுவனத்தின் காட்சியகத்தில் மறுவிற்பனைக்கு உள்ள 90 வாகனங்களில், 10 விழுக்காடு மட்டுமே மின்வாகனங்கள் என அதன் நிர்வாக இயக்குநர் அன்சன் லீ தெரிவித்துள்ளார்.
மின்வாகனங்களின் மறுவிற்பனை மதிப்பு தற்போதைய சந்தையில் மிகவும் குறைவாக இருப்பதால், அவற்றை கவனமாக தேர்ந்தெடுத்து மட்டுமே விற்பனைக்கு எடுக்க வேண்டிய சூழல் இருப்பதாகவும் அவர் கூறினார்.பல முயற்சிகளுக்குப் பிறகும், ஓர் ஆண்டுக்கும் மேலாக விற்கப்படாமல் உள்ள மின்வாகனம் ஒன்று தங்களிடம் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மறுவிற்பனைச் சந்தையில் சீன தயாரிப்பான BYD மின்வாகனம் மட்டுமே ஓரளவு நன்மதிப்பைப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வழக்கமான வாகனங்கள் ஆண்டுக்கு சுமார் 10 விழுக்காடு மதிப்பை இழக்கும் நிலையில், மின்வாகனங்கள் 40 விழுக்காடு வரை மதிப்பிறக்கம் அடைவதும் மறுவிற்பனையை பெரிதும் பாதிக்கிறது.
புதிய அம்சங்களுடன் தொடர்ந்து அறிமுகமாகும் மின்வாகனங்களை மக்கள் விரும்பி வாங்குவதால், பழைய மின்வாகனங்கள் சந்தையில் தேக்கமடைவதும் ஒரு காரணமாக உள்ளது. அதோடு, பழுதுபார்ப்பதற்கான உபரி பாகங்கள் எளிதில் கிடைக்காததும் மறுவிற்பனை சந்தையில் மின்வாகனங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது.