சிங்கப்பூர்: சிங்கப்பூருக்குள் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி வழியே போதைப்பொருள் கடத்தி வர முயன்ற சந்தேகத்தில் 2 ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஒருவரின் வயது 33, மற்றொருவரின் வயது 36 ஆகும். இவர்கள் இருவரும் இரு வேறு தினங்களில் போதைப்பொருளைத் தங்கள் வாகனங்களில் கடத்தி வர முயன்றதாகக் கூறப்பட்டது.
இதில் 33 வயது ஆடவர் கடந்த மாதம் 31 ஆம் தேதி சுமார் 400 கிராம் ice போதைப்பொருளைக் காரில் மறைத்து வைத்துக் கடத்த முயன்றுள்ளார்.
அதிகாரிகள் இவரைச் சோதித்தபோது இவரின் கால்சட்டையில் போதைப்பொருளுடன் கூடுதலாக பொட்டலங்களும் சுமார் 2,900 வெள்ளியும் மேலும் சில வெளிநாட்டு நாணயங்களும் இருந்தது கண்டறியப்பட்டது.
இந்த நபரிடம் இருந்து பறிமுதலான போதைப்பொருளின் மதிப்பானது 52,000 வெள்ளிக்கும் அதிகமாக இருந்தது என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அதிகாரிகளின் கூடுதல் விசாரணைக்குப் பிறகு சில தகவல்கள் கிடைத்தது. அவை பின்வருமாறு: அதே நாளில் பிராஸ் பாசாவில் 52 வயதைச் சேர்ந்த சிங்கப்பூர் ஆடவர் ஒருவர் போதைப்பொருள் குற்றங்கள் புரிந்ததற்காக சந்தேகத்தின்பேரில் கைதானதாகக் குடிநுழைவு சோதனைச் சாவடிகள் ஆணையமும் மற்றும் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவும் தெரிவித்தது.
ஆகஸ்ட் 2 ஆம் தேதி நடந்த மற்றொரு சம்பவத்தில் அன்று காலை மலேசியாவைச் சேர்ந்த 36 வயது ஆடவர் சுமார் 4 கிலோகிராம் போதைப்பொருளான அபினையும் மற்றும் 10 கிராம் ketamine போதைப்பொருளையும் தனது மோட்டார் சைக்கிளில் கடத்த முயன்றுள்ளார்.
அவற்றின் மொத்த மதிப்பானது 100,000 க்கும் அதிகமானதாக உள்ளது எனக் கூறப்பட்டது. மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.