வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறிய நபருக்கு கடும் தண்டனை..!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் வீட்டு விளக்கை பழுதுபார்க்கும் போது பெண் வீட்டு உரிமையாளரை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 49 வயதான புதுப்பித்தல் ஒப்பந்ததாரருக்கு உயர் நீதிமன்றம் இன்று(26.11.25) தண்டனை விதித்தது.
குற்றவாளியான 49 வயதான கோ லீ ஹ்வா, சிங்கப்பூரின் நிரந்தர குடியிருப்பாளர் ஆவார்.
அவர்மீது கற்பழிப்பு, பாலியல் வன்கொடுமை மற்றும் அநாகரீகமான தாக்குதல் உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. குற்றவாளி இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து, உறவு இருவரின் சம்மதத்துடன் நடந்தது என வாதிட்டார். ஆனால் நீதிபதி அவரது வாக்குமூலத்தை நம்பமுடியாததாகக் கூறி, குற்றவாளி என தீர்ப்பளித்தார்.
நீதிமன்றத்தில் வெளியிடப்பட்ட தகவலின்படி, 2015 இல் வீட்டு உரிமையாளர் தனது வீட்டை புதுப்பிக்க கோ லீ ஹ்வாவின் உதவியை நாடியிருந்தார். பின்னர் மின் பழுதுகள் உள்ளிட்ட சிறிய பணிகளுக்காக அவனை தொடர்ந்து அழைத்துக் கொண்டிருந்தார்.
2021 ஆகஸ்டில், குளியலறை மற்றும் சமையலறை விளக்குகளை சரிசெய்ய வந்தபோது, கோ லீ ஹ்வா பெண் உரிமையாளரை வலுக்கட்டாயமாக அணைத்துக் கொண்டு, படுக்கையறைக்கு அழைத்து சென்று, அவளின் சம்மதமின்றி பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கில் கூறப்பட்டுள்ளது.
நீதிபதி, குற்றவாளியின் செயல் பாதிக்கப்பட்டவருக்கு மனஉளைச்சலையும், கர்ப்பம் மற்றும் நோய் அபாயத்தையும் ஏற்படுத்தியதாகக் கூறி, இது மிகக் கடுமையான குற்றம் எனக் குறிப்பிட்டார்.
தண்டனை அறிவிக்கப்பட்ட பிறகு, குற்றவாளி மேல்முறையீடு செய்ய விருப்பம் தெரிவித்தார். அவரது மகள் உத்தரவாததாரராக இருந்து, மேல்முறையீடு நிலுவையில் உள்ள நிலையில் அவரை ஜாமீனில் விடுவிக்க அனுமதித்தார்.
உயர் நீதிமன்றம் அவருக்கு இன்று(26.11.25) 13 ஆண்டுகள் 3 வார சிறைத்தண்டனையும் 13 பிரம்படிகளும் விதித்தது.
சிங்கப்பூர் சட்டப்படி, பாலியல் வன்கொடுமை குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒவ்வொரு குற்றத்திற்கும் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை,அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படலாம்.