அக்குபஞ்சர் சிகிச்சையில் அலட்சியம்…!! மருத்துவருக்கு கடும் தண்டனை..!!

அக்குபஞ்சர் சிகிச்சையில் அலட்சியம்...!! மருத்துவருக்கு கடும் தண்டனை..!!

சிங்கப்பூர்:அக்குபஞ்சர் சிகிச்சைக்குப் பிறகு நோயாளியின் உடலில் ஊசி ஒன்று அகற்றப்படாமல் விடப்பட்ட சம்பவம் சிங்கப்பூரில் கவலைக்குரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதுகு, தோள்பட்டை மற்றும் கழுத்து வலிக்காக பாரம்பரிய சீன மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்ற அந்த நோயாளி, சிகிச்சை முடிந்து எழுந்து அமர்ந்தபோது பிட்டத்தின் கீழ் திடீரென குத்துவது போன்ற கடுமையான வலி மற்றும் அசௌகரியத்தை உணர்ந்தார். பின்னர் தனது உடலில் இன்னும் ஒரு அக்குபஞ்சர் ஊசி செருகப்பட்டிருப்பதை கண்ட அவர், அதனை தானாகவே அகற்றிக் கொண்டார். இந்த சம்பவத்தால் நோயாளி அதிர்ச்சி அடைந்ததுடன், சில நேரம் தலைச்சுற்றலும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, பாரம்பரிய சீன மருத்துவ மேலாண்மை குழு விரிவான விசாரணை நடத்தியது. விசாரணையில், சம்பந்தப்பட்ட மருத்துவர் போதுமான மருத்துவ வரலாறு சேகரிக்காததும், நோயாளியிடமிருந்து தெளிவான சம்மதத்தை பெறாதது,சிகிச்சை பதிவுகளை முறையாக பராமரிக்காதது மற்றும் சிகிச்சை முடிந்த பின் தேவையான கவனிப்பை வழங்க தவறியது போன்ற குற்றங்கள் கண்டறியப்பட்டது.

இத்தகைய தொழில்முறை அலட்சியமே நோயாளியின் உடலில் ஊசி அகற்றப்படாமல் விடப்பட காரணமாக அமைந்ததாக குழு தெரிவித்தது.

இந்த செயல் திட்டமிட்டு செய்யப்படாததாக இருந்தாலும், நோயாளிக்கு உண்மையான பாதிப்பை ஏற்படுத்தியதாகவும், பாரம்பரிய சீன மருத்துவத்தின் மீது பொதுமக்களுக்கு உள்ள நம்பிக்கையை சிதைக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் குழு சுட்டிக்காட்டியது.

இதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட மருத்துவரின் மருத்துவ உரிமம் மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டதுடன்,S$ 5,000 அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க தொழில்முறை ஒழுக்கங்களை கடைப்பிடிப்பதாக உறுதிமொழி எடுக்கவும், விசாரணை செலவுகளைச் செலுத்தவும் உத்தரவிடப்பட்டது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK