பண்டிகை நாட்களை இனிப்பாக்கும் சில வீட்டுச் சிறப்புப் பலகாரங்கள்..!!!
கிறிஸ்துமஸுக்குப் பிறகு புத்தாண்டு, பொங்கல் என பண்டிகைக் காலம் தொடர்ச்சியாக நம்மை மகிழ்விக்கக் காத்திருக்கிறது. அந்த வகையில் விடுமுறை கொண்டாட்டத்தை முழுமையாக அனுபவிக்க, சுவையான உணவுகளைப் பகிர்வதைவிடச் சிறந்த வழி வேறில்லை. அன்பின் சுவையை உங்கள் அன்பிற்குரியோர் உணரச் செய்திட, குடும்பத்தினரும் நண்பர்களும் ரசித்து ருசிக்கும் வகையில் விழாக்கால பலகாரங்களை வீட்டிலேயே தயாரித்து அவர்களின் பாராட்டுகளைப் பெறலாம்.
இதற்காக உலக புகழ் பெற்ற சமையல் கலைஞர் டாக்டர். குமரேசன் கோகுலநாதன் வழங்கிய சமையல் குறிப்புகள் சிலவற்றை காணலாம்.
கவுனி அரிசி பிரவுனி – கருப்பட்டி சாக்லெட் சுவைச்சாறு
கவுனி அரிசியின் பாரம்பரிய சுவையும், சாக்லெட்டின் நவீன இனிப்பும் ஒன்றிணையும் இந்த பிரவுனி,பண்டிகை மேசைக்கு புதுமையான தேர்வாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
கவுனி அரிசிப் பொடி – 300 கிராம்
முட்டை – 16
டார்க் சாக்லெட் – 1 கிலோ
கோக்கோ பொடி – 200 கிராம்
பேக்கிங் பொடி – 15 கிராம்
நாட்டுச் சர்க்கரை – 600 கிராம்
பால் – 500 மில்லிலிட்டர்
வெண்ணிலா எசன்ஸ் – 15 மில்லிலிட்டர்
வெண்ணெய் – 1 கிலோ
செய்முறை:
அடுக்குப் பாத்திரத்தில் வெண்ணெய்,டார்க் சாக்லெட்,நாட்டுச் சர்க்கரை,பால், வெண்ணிலா எசன்ஸ் ஆகியவற்றை கரைத்து, அதில் முட்டை மற்றும் கவுனி அரிசிப் பொடி, கோக்கோ பொடி, பேக்கிங் பொடி சேர்த்து மென்மையான கலவையாகத் தயாரிக்க வேண்டும். பின்னர் 160 டிகிரி சூட்டில் ஓவனில் 35 முதல் 40 நிமிடம் வரை வேகவைத்து, துண்டுகளாக நறுக்கி பரிமாறலாம்.
இதன் சிறப்பாக, கருப்பட்டியில் தயாரிக்கும் சாக்லெட் சுவைச்சாறு பிரவுனியின் மேல் ஊற்றப்பட்டால், சுவை மேலும் உயர்கிறது.
அதற்கு கருப்பட்டியை தண்ணீரில் கரைத்து, அதில் கோக்கோ பொடி சேர்த்து கெட்டியாக்கி, சிறிது சூடு ஆறிய பிறகு பிரவுனியின்மீது ஊற்றிப் பரிமாறலாம்.
நெய்யில் பொன்னிறமாக வறுத்த ரவையில், முந்திரி, பாதாம், பிஸ்தா, திராட்சை, பேரீச்சம்பழம், உலர் அத்திப்பழம் போன்றவற்றை சேர்த்து வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.
பின்னர் தண்ணீர் ஊற்றி ரவை வெந்து கெட்டியானதும், நாட்டுச் சர்க்கரை, பட்டை, ஏலக்காய், அன்னாசிப்பூ, ஜாதிக்காய் போன்ற வாசனைப் பொருள்களைச் சேர்த்து நன்றாகக் கிளற வேண்டும்.
இறுதியாக ரம் எசன்ஸ், வெண்ணிலா எசன்ஸ் மற்றும் சிறிது நெய் சேர்த்து, ஒரு தட்டில் ஊற்றி ஆறிய பின் துண்டுகளாக நறுக்கி பரிமாறலாம்.
இந்த பண்டிகைக் காலத்தில், இத்தகைய சிறப்பு பலகாரங்கள் வீட்டில் தயாராகும் போது, கொண்டாட்டங்களின் சுவையும் மகிழ்ச்சியும் இரட்டிப்பாகும்.