தைவானிய இணைய பிரபலத்திற்கு சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி மறுப்பு..!!
சிங்கப்பூர்:தைவானிய இணைய பிரபலம் ஒருவர், சிங்கப்பூருக்குள் நுழைய தேவையான பார்வையாளர் அனுமதி நிபந்தனைகளை பூர்த்தி செய்யாததால், சாங்கி விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் நாடு கடத்தப்பட்டதாக கூறியுள்ளார்.
“காம ராணி” என்ற பெயரில் அறியப்படும் இணைய பிரபலம் ஸ்ப்ரைட் (உண்மையான பெயர் ஃபாங் கியுவான்), கடந்த ஆண்டு செப்டம்பர் 29 அன்று சிங்கப்பூருக்கு வந்தபோது குடிவரவு அதிகாரிகளால் கூடுதல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
குடியேற்ற அதிகாரிகள் அவரது கைப்பேசியைச் சோதனை செய்த போது, அதில் சில பொருத்தமற்ற படங்கள் இருந்ததாக அவர் தெரிவித்தார். அவை தனது தனிப்பட்ட பயன்பாட்டுக்கானவை என்று அவர் விளக்கம் அளித்தாலும், அதிகாரிகள் அதை ஏற்கவில்லை. அதன் பின்னர், அவர் சிங்கப்பூருக்குள் வருவதற்கான நோக்கம் தெளிவாக இல்லை என மதிப்பிடப்பட்டதால், நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு, அவர் தைவானுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.
இது தொடர்பாக சனிக்கிழமை (07.02.26)குடிவரவுத் துறை வெளியிட்ட தகவலில் ஃபாங் கியுவானுக்கு சிங்கப்பூருக்குள் அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பான ஆன்லைன் அறிக்கைகளை கவனத்தில் கொண்டதாக தெரிவித்துள்ளது.
வெளிநாட்டவர்கள் சிங்கப்பூருக்குள் நுழைவது ஒரு உரிமை அல்ல என்றும், ஒவ்வொரு பயணியின் விண்ணப்பமும் தனிப்பட்ட முறையில் மதிப்பாய்வு செய்யப்படும் என்றும் ICA வலியுறுத்தியுள்ளது.
பார்வையாளர் பாஸ் நிபந்தனைகளை பூர்த்தி செய்யாதவர்கள், நேர்காணல் அல்லது கூடுதல் சோதனைகளுக்குப் பிறகு நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்படலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.