வங்காள தேசத்தில் நச்சு வாயு கசிவு..! 8 பேர் பலி..50 பேர் மாயம்!

வங்காள தேசத்தில் நச்சு வாயு கசிவு..! 8 பேர் பலி..50 பேர் மாயம்!

சிட்டாகாங்: வங்கதேசத்தின் சிட்டாகாங் பகுதியில் உள்ள கப்பல் உடைக்கும் ஆலையில் ஏற்பட்ட பயங்கர நச்சு வாயு கசிவில் சிக்கி 8 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 50 பேரை காணவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

வங்கதேசத்தின் தென்கிழக்கு துறைமுக நகரான சிட்டாகாங் சிதாகுண்டா கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள Ferdous Steel Shipbreaking Yard என்ற ஆலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவைக் (LNG) கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டு, பின்னர் கைவிடப்பட்ட பழைய கப்பல் ஒன்றை உடைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அந்த கப்பலில் இருந்து கடுமையான நச்சுவாயு கசிந்துள்ளது.

நச்சு வாயுவை சுவாசித்ததால் மூச்சு திணறல் ஏற்பட்டு 6 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர்  மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிர் இழந்ததை அடுத்து பலி  எண்ணிக்கை  8-ஆக உயர்ந்துள்ளது.

மேலும் இந்த விபத்தில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கப்பலை வெட்டி எடுக்கும் பணிகளைத் தொடங்குவதற்கு முன்பாக அதில் எஞ்சி இருக்கும் வாயிக்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் ஆலை நிர்வாகம் இந்த அத்தியாவசிய பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றவில்லை என்று முதற்கட்ட விசாரணையில் தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது இந்த விபத்து குறித்து விசாரிக்க வங்கதேச அரசு ஒரு பிரத்தியேக குழுவை அமைத்துள்ளது. சம்பந்தப்பட்ட கப்பல் உடைக்கும் ஆலையை முழுமையான தணிக்கை செய்யவும் உத்தரவிட்டுள்ளது.