உட்லேண்ட்ஸ் மகிழ்ச்சியின் பின்னணியில் இருக்கும் சாண்டா மாமா யார்...?
சிங்கப்பூர்: உட்லேண்ட்ஸ் தெரு 13 இல் உள்ள “சாண்டா மாமா” என்றழைக்கப்படும் மூத்த குடியிருப்பாளர், கடந்த 24 ஆண்டுகளாக தொடர்ந்து தனது சுற்றுப்புறத்தை கிறிஸ்துமஸ் அலங்காரங்களால் ஒளிரச் செய்து வருகிறார். இந்த ஆண்டு பொருளாதார மந்தநிலை காரணமாக அலங்காரங்களை செய்யாமல் இருக்க எண்ணியிருந்தாலும், அண்டை வீட்டாரின் ஊக்கம் மற்றும் எதிர்பார்ப்புகள் காரணமாக அவர் அந்த பாரம்பரியத்தை தொடர முடிவு செய்துள்ளார்.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் பின்னணியில் இருப்பவர் 65 வயதான ஓய்வுபெற்ற தச்சரான சென் கோங்டா. ஒவ்வொரு ஆண்டும் அவர் தனிப்பட்ட முறையில் அலங்காரங்களை வடிவமைத்து, கட்டி, சமூகத்தை ஒரு பண்டிகை சூழ்நிலையால் நிரப்பி வருகிறார்.
செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், இந்த ஆண்டு செலவுகளை குறைப்பதற்காக அலங்காரங்களை தவிர்க்க நினைத்ததாகவும், ஆனால் குடியிருப்பாளர்கள் ஆர்வத்துடன் கேட்டதையடுத்து சில அலங்காரங்களையாவது செய்ய முடிவு செய்ததாகவும் தெரிவித்தார்.
இந்த ஆண்டு பெரும்பாலான அலங்காரங்கள் முந்தைய ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்ட பொருட்களை மறுசுழற்சி செய்து உருவாக்கப்பட்டவை. இதன் மூலம் மறுசுழற்சியின் முக்கியத்துவத்தையும், பொருட்களுக்கு “இரண்டாவது வாழ்க்கை” கொடுக்கலாம் என்பதையும் மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று சென் கோங்டா நம்புகிறார்.
குறிப்பாக இரண்டு கலைமான் வடிவ அலங்காரங்கள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து, பலரையும் புகைப்படம் எடுக்க வைத்துள்ளது.
இந்த அலங்காரங்கள் சமூகத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் அதிகரிப்பதாக குடியிருப்பாளர்கள் கூறுகின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக இப்பகுதியில் வசித்து வரும் திருமதி சென், ஒவ்வொரு ஆண்டும் இந்த அலங்காரங்களை பார்க்க வருவது தங்களுக்கு ஒரு வழக்கமாகி விட்டதாக தெரிவித்தார்.மற்றொரு குடியிருப்பாளர், இளம் வயதுடைய ஷி வென்க்சுவான், இந்த அலங்காரங்கள் அண்டை வீட்டாரிடையே நட்புறவை வலுப்படுத்துவதாகவும், பகுதியை மேலும் உயிர்ப்புடன் மாற்றுவதாகவும் கூறினார்.