சிங்கப்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகும் 32 வயது வாலிபர்..!! காரணம்..??
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் சட்டவிரோதமாக கடன் வழங்கி துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் 32 வயது நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.இதுகுறித்து சிங்கப்பூர் காவல்துறை நேற்று (27.02.26) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை (23.02.26) மாலை சுமார் 7 மணி 25 நிமிட அளவில் புக்கிட் பாத்தோக் கிழக்கு அவென்யூ 3 பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் கடன் வசூல் குறித்த குறிப்பு வைக்கப்பட்டிருந்ததாக புகார் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
ஜூரோங் காவல் பிரிவு அதிகாரிகள் கண்காணிப்பு ஒளிப்பதிவு காட்சிகளை ஆய்வு செய்து சந்தேக நபரை அடையாளம் கண்டு பின்னர் கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில், தீவு முழுவதும் இடம்பெற்ற இதேபோன்ற சட்டவிரோத கடன் துன்புறுத்தல் வழக்குகளிலும் அவர் தொடர்புடையதாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதுகுறித்து மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.
அந்த நபர் மீது இன்று (28.02.26) நீதிமன்றத்தில் பணக் கடன் வழங்குபவர்கள் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்படவுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், முதல் முறை குற்றவாளிகளுக்கு S$5000 முதல் S$50,000 வரை அபராதம், ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ஆறு பிரம்படிகள் வரை விதிக்கப்படலாம்.
சட்டவிரோத கடன் துன்புறுத்தல் நடவடிக்கைகளுக்கு எந்தவித சகிப்புத்தன்மையும் இல்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது. சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பதும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதும், பொது பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்துவதும் கடுமையாகக் கையாளப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத கடன் நடவடிக்கைகள் குறித்து சந்தேகம் இருந்தால் “999” என்ற காவல் உதவி எண்ணை அழைத்து தகவல் வழங்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.