சிங்கப்பூருக்குள் நுழைய முயன்ற மலேசிய இளைஞர் கைது..!!! காரணம்..??
சிங்கப்பூர்:கம்போடியாவில் செயல்பட்டு வந்த பெரிய மோசடி கும்பலுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில், சிங்கப்பூருக்குள் நுழைய முயன்ற போது 24 வயது மலேசிய நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட அந்த நபர்,அரசு அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து சிங்கப்பூர் குடிமக்களை ஏமாற்றிய வழக்குகளில் தொடர்புடைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் குழுவின் உறுப்பினராக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இந்த மோசடி கும்பல் கம்போடியாவின் புனோம் பென்னில் அமைந்த மோசடி கூடத்தில் இருந்து செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து,சிங்கப்பூர் காவல்படையும் கம்போடிய தேசிய காவல்படையும் இணைந்து இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி அந்த மறைவிடத்தில் கூட்டு சோதனை நடத்தியுள்ளன. தொடர்ந்து நடைபெற்று வரும் விசாரணையின் ஒரு பகுதியாக, அந்தக் கும்பலுடன் தொடர்புடைய சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்கள் ஆதாரங்களை அழிக்க முடியாத வகையில் தடுப்பு உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இந்த மோசடி கும்பல் குறைந்தது 438 வழக்குகளில் ஈடுபட்டு, சுமார் S$41 மில்லியன் தொகையை ஏமாற்றியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
காவல்துறையின் தகவலின்படி,அந்த நபர் ஞாயிற்றுக்கிழமை உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி வழியாக சிங்கப்பூருக்குள் நுழைய முயன்றபோது கைது செய்யப்பட்டார்.தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை அவர் மீது கடுமையான குற்றத்திற்கு உதவியதாக நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு சுமத்தப்பட உள்ளது.