ஜூன் முதல் நடமாட்டச் சாதனங்களுக்கு புதிய கட்டுப்பாடு..!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் ஜூன் 1 முதல் தனிநபர் நடமாட்டச் சாதனங்களைப் பயன்படுத்துவோருக்கு மருத்துவத் தேவைக்கான சான்றிதழ் கட்டாயமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 70 வயதை எட்டிய முதியோர்களுக்கும், அரசு திட்டங்களின் கீழ் தகுதி பெறுபவர்களுக்கும் இந்த விதிமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்படும். இந்த நடவடிக்கை, நடமாட்டப் பிரச்சினை இல்லாதவர்கள் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்காக எடுக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துத் துணையமைச்சர் பே யாம் கெங் கூறுகையில், சமீப காலங்களில் உடல்நலத்துடன் இருப்போர் தனிநபர் நடமாட்டச் சாதனங்களை தேவையின்றி பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருவது கவலைக்குரியதாக உள்ளதாக தெரிவித்தார். இதன் காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய நிபந்தனைகள் அவசியமானதாக மாறியுள்ளன என்றார்.
இந்தச் சாதனங்களைப் பயன்படுத்தத் தகுதியுடையவர்கள், பிப்ரவரி 27ஆம் தேதியிலிருந்து மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளலாம். இந்த பரிசோதனைகளின் மூலம், உண்மையில் நடமாட்ட உதவி தேவைப்படுவோரே இச்சாதனங்களைப் பயன்படுத்துகிறார்களா என்பதை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை கொண்டுவரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிலப் போக்குவரத்து தொடர்பான மசோதாவில், தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் குறித்த மேலும் சில புதிய விதிமுறைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. அதன்படி, ஜூன் 1 முதல் விற்கப்படும் அனைத்து தனிநபர் நடமாட்டச் சாதனங்களும் கட்டாயமாகப் பதிவுசெய்யப்பட வேண்டும் என்ற விதி அமலுக்கு வருகிறது.
மேலும், பொதுப் பாதைகளில் இச்சாதனங்களுக்கான வேக வரம்பு மணிக்கு 10 கிலோமீட்டரிலிருந்து 6 கிலோமீட்டராகக் குறைக்கப்படுகிறது. இதன் மூலம், நடைபாதைகளிலும் பொது இடங்களிலும் விபத்துகள் ஏற்படுவதைக் குறைக்க முடியும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மக்கள்தொகை மூப்படைவதும், நடமாட்ட உதவி சாதனங்களின் தேவை அதிகரிப்பதும் காரணமாக, அவை பாதுகாப்புடனும் பொறுப்புடனும் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே இந்த நடவடிக்கைகளின் முக்கிய நோக்கம் என பே யாம் கெங் கூறினார்.இதே நேரத்தில், சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துவோருக்கு மருத்துவச் சான்றிதழ் தேவையில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
மூத்தோர் நடமாட்ட மற்றும் இயக்க உதவிநிதி, உடலியக்க உதவிச் சாதன நிதி ஆகியவற்றின் கீழ் ஏற்கெனவே பலனடைந்தோர், 70 வயதை எட்டிய முதியோர், மேலும் சுகாதார அமைச்சின் கீழ் செயல்படும் உடற்குறை உடையோருக்கான திட்டங்களில் விண்ணப்பித்தவர்கள் ஆகியோருக்கு இந்த விதிமுறையில் தானாகவே விதிவிலக்கு வழங்கப்படும். இதற்காக பயனீட்டாளர்கள் தனியாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.