தொழில்நுட்ப கோளாறுகளுக்குப் பிறகு பேருந்து வருகை தகவலமைப்பு சீரமைப்பு..!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பேருந்து வருகை நேரங்களைக் காட்டும் கட்டமைப்பு தற்போது 90 விழுக்காட்டிற்கும் மேலாகச் சீரமைக்கப்பட்டுள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) தெரிவித்துள்ளது. கடந்த வாரங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளைத் தொடர்ந்து, பயணிகளுக்குத் துல்லியமான தகவல்களை வழங்கும் நோக்கில் இந்தச் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், பேருந்துக் கட்டண முறை மற்றும் பேருந்துகளின் எண்ணிக்கை நிர்வாகத்தைப் புதுப்பிக்கும் பணியும் தொடங்கப்பட்டுள்ளதாக ஆணையம் நேற்று(07.02.26) அறிவித்தது. இந்த நடவடிக்கைகள் பொதுப் போக்குவரத்து சேவைகளின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படுகின்றன.
பேருந்து வருகை நேரக் கட்டமைப்பைச் சீரமைக்கும் பணியில், ஜனவரி 21 முதல் ஒப்பந்ததாரருடன் இணைந்து செயல்பட்டு வருவதாக LTA தெரிவித்தது. இதன் ஒரு பகுதியாக, 4,000 பேருந்துகளில் உள்ள ‘டிரான்ஸ்மிட்டர்’ கருவிகளின் ‘மெமரி கேஷ்’ எனப்படும் தற்காலிக நினைவகம் அழிக்கப்பட்டு, மென்பொருள்கள் புதுப்பிக்கப்பட்டன. சில பேருந்துகளில் புதிய டிரான்ஸ்மிட்டர்களும் பொருத்தப்பட்டன.
இந்தச் சீரமைப்புகளின் மூலம், பேருந்து வருகை நேரத் தகவல்கள் கிடைப்பதில் ஏற்பட்டிருந்த சிக்கல்களும்,நீண்ட நேரம் காத்திருப்பதாகக் காட்டப்பட்ட பிழைகளும் படிப்படியாகக் குறையும் என்று ஆணையம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. பயணிகளிடம் இடையூறுகளுக்காக மன்னிப்புக் கோரியுள்ள ஆணையம், அவர்கள் காட்டிய பொறுமைக்கும் நன்றி தெரிவித்தது.
தொடக்கத்தில், இந்தக் கட்டமைப்பு நான்கு நாள்களில் முழுமையாகச் சரிசெய்யப்படும் என ஜனவரி 22 அன்று LTA கணித்திருந்தது. பாதிக்கப்பட்ட 3,000 பேருந்துகளில் புதுப்பிப்பு நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்ட போதிலும், பின்னர் கூடுதலாக 1,000 பேருந்துகளுக்கும் புதுப்பிப்பு தேவைப்படுவதை ஆணையம் கண்டறிந்தது. இந்தப் பிரச்சினை ஜனவரி 10 அன்று முதன்முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவித்தது.
இந்தக் கோளாறுகளால், பேருந்து நிறுத்தங்களிலுள்ள மின்னிலக்கத் தகவல் பலகைகள், http://MyTransport.SG செயலி மற்றும் மூன்றாம் தரப்புச் செயலிகள் மூலம் பேருந்து வருகை நேரத் தகவல்களைப் பெற முடியாத நிலை ஏற்பட்டது. ஜனவரி 23 அன்று சோதனைக்காக கட்டமைப்பு மீண்டும் இயக்கப்பட்டபோது, 60 விழுக்காட்டிற்கும் அதிகமான தகவல்கள் மீண்டும் கிடைக்கத் தொடங்கின. 2025 இறுதித் தரவுகளின்படி, சிங்கப்பூரில் மொத்தம் 6,067 பொதுப் பேருந்துகள் இயங்கி வருகின்றன.
Follow us on : click here
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
