துவாஸ் சாலையில் பரபரப்பு..!! 3 வாகனங்கள் மோதியதில் 22 பேர் படுகாயம்..!!
சிங்கப்பூர்: துவாஸில் 3 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் பயங்கர சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 22 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துவாஸ் சவுத் பொலிவர்டை நோக்கிச் செல்லும், துவாஸ் சவுத் அவென்யூ 3 -இல் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. சிற்றுந்து, கனரக வாகனம் மற்றும் லாரி ஆகிய 3 வாகனங்களும் மோதிக்கொண்ட இந்த பயங்கர விபத்தானது நேற்று (ஜூன் 18) காலை நிகழ்ந்துள்ளது.
இது குறித்து காலை 6:50 மணி அளவில் காவல்துறைக்கும் சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படையினருக்கும் (SCDF) தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், விபத்தில் சிக்கிய 6 பேரை தேசிய பல்கலைக்கழகம் மருத்துவமனையிலும், மேலும் 16 பேரை இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
காயமடைந்தவர்கள் 21 வயதிற்கும் 53 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் என்றும்,மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது அவர்கள் சுயநினைவோடு இருந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த விபத்து குறித்த காணொளி ஆனது டிக்டாக் சமூக ஊடகப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. அந்த காணொளியில் சேதம் அடைந்த லாரி ஒன்றுக்கு பின்னால் மோதி நிலையில் ஒரு சிற்றுந்து நின்று கொண்டிருக்கிறது.
அதன் முன்பக்க கண்ணாடியும் பக்கவாட்டு சன்னலும் உடைந்து நொறுங்கி இருப்பது அதில் தெரிகிறது. மேலும் அந்த இரு வாகனங்களுக்கும் இடையில் கண்ணாடித் துண்டுகள் மற்றும் சிதைந்த பாகங்கள் ஆகியவை சிதறி கிடைக்கின்றன.
லாரியின் முன்பகுதி ஒரு கனரக வாகனத்தின் பின்பகுதியில் மோதிய நிலையில் அந்த ஓட்டுநருக்கான பக்கவாட்டு கதவு சற்று திறந்திருப்பதையும் அந்த காணொளியில் காண முடிகிறது.