சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடு..!! இதனால் பாதிக்கப்படப் போவது யார்..??
சிங்கப்பூரின் கேலாங் பகுதியில் உள்ள காசா ஏரட்டா (Casa Aerata) அடுக்குமாடி குடியிருப்பில் வெளிநாட்டு ஊழியர்கள் தங்குவதற்கு நிர்வாக குழு புதிய தடையை விதித்துள்ளது.
குறிப்பிட்ட சில பிரிவுகளைச் சேர்ந்த ஊழியர்களை மட்டும் தங்க வைக்கக் கூடாது என தற்போது முடிவெடுக்கப்பட்டுள்ளது.
நிர்வாக குழுவின் இந்த புதிய கட்டுப்பாட்டால் வீட்டு உரிமையாளர்களுக்கும், நிர்வாக குழுவுக்கும் இடையே கடுமையான மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன.
கே லாங்கில் அமைந்துள்ள காசா ஏரட்டா கூட்டுரிமைக் குடியிருப்பு நிர்வாகம், சேவைத் துறை மற்றும் கட்டுமானத் துறைகளில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் தங்களது குடியிருப்பில் தங்குவதற்கு தடை விதிப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நிறைவேற்றப்பட்ட துணை விதியில் ‘எம்ப்ளாய்மென்ட் பாஸ்’ (Employment Pass), எஸ் பாஸ் (S Pass) மற்றும் சேவை துறையைச் சேர்ந்த மலேசிய ஊழியர்கள் மட்டுமே அங்கு தங்க தகுதி உடையவர்கள் என தெரிவிக்கப்பட்டது.
இந்த விதிமுறைகளை மீறி தங்கள் வீடுகளை நிறுவனங்களுக்கு வாடகைக்கு விட்டிருந்த 12 உரிமையாளர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் நிர்வாக குழு சட்ட ரீதியான எச்சரிக்கைகளை அனுப்பி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வாடகை ஒப்பந்தங்களில் தேவையான மாற்றங்களை செய்ய மார்ச் 31ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் விதிகளைப் பின்பற்றாதவர்களுக்கு $200 நிர்வாகக் கட்டணம் விதிக்கப்படும் என்றும் நிர்வாக குழு தெரிவித்திருந்தது.
இந்த கட்டுப்பாட்டால் வெளிநாட்டு ஊழியர்களை வாடகைக்கு குடி அமர்த்த இருந்த சில வீட்டு உரிமையாளர்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர். அவர்களது தனிப்பட்ட சொத்துரிமைகளில் நிர்வாக குழு தலையிடுவதாக உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
குடியிருப்பின் பொதுவான விதிகளைப் பின்பற்றவும், மற்ற குடியிருப்பாளர்களை அமைதி மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிர்வாகக் குழுத் தரப்பு இந்த கட்டுப்பாட்டை நியாயப்படுத்தி இருக்கிறது.