பூன் லே பகுதியில் நடந்த அதிர்ச்சி விபத்து..!! முதியவர் பலி..!
சிங்கப்பூர்:பூன் லே பகுதியில் நடந்த விபத்தில் 72 வயது பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். டிராக்டர்-டிரெய்லர் வாகனம் மோதியதாகக் கூறப்படும் இந்தச் சம்பவத்துக்குப் பின்னர், கவனக்குறைவாக வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் 48 வயது ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
சமூக வலைதளமான டிக் டாக்கில் பரவி வரும் காணொளியில், பூன் லே ஷாப்பிங் சென்டர் அருகிலுள்ள வாகனம் நிறுத்துமிடத்தில் சம்பவம் நடந்த இடம் சுற்றிவளைக்கப்பட்டிருந்தது. சாலையின் நடுப்பகுதியில் வாகனம் நிறுத்தப்பட்டிருந்ததுடன், தரையில் இரத்தக் கறைகள் தென்பட்டன.
காணொளியில் குறைந்தது மூன்று போலீஸ் கார்கள் மற்றும் இரண்டு போலீஸ் மோட்டார் சைக்கிள்கள் சம்பவ இடத்தில் இருந்ததையும், பல அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டதையும் காண முடிந்தது. ஒருவரை கைவிலங்கிட்டு போலீசார் அழைத்துச் செல்லும் காட்சியும் பதிவாகியுள்ளது.
போலீசார் தெரிவித்ததாவது, நேற்று (14.02.26) காலை 7:20 மணியளவில் டிராக்டர் வாகனமும் பாதசாரியும் தொடர்புடைய விபத்து குறித்து தகவல் கிடைத்தது. மயக்க நிலையில் இருந்த முதியவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படை தெரிவித்ததாவது, அவர் பின்னர் இங் டெங் ஃபாங் பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். எனினும், சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்ததாக போலீசார் உறுதிப்படுத்தினர்.
இந்தச் சம்பவம் குறித்து தற்போது மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.